குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து நியூஸ் 7 தமிழ் தலைமைச் செய்தியாளர் சுடலைக்குமாருக்கு, மாநகராட்சி ஆணையர் தென்னரசு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
குஜராத்தில் உள்ள சர்வதேச நிதி சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து அறிந்துகொள்வதற்காக பத்திரிகை தகவல் மையத்தின் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் அகமதாபாத் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதில் நியூஸ் 7 தமிழ் சார்பில் நமது தலைமைச் செய்தியாளர் சுடலைக்குமார் பங்கேற்றுள்ளார். அகமதாபார் சென்ற அவர், அந்த மாநகராட்சியின் ஆணையரும் தமிழருமான தென்னரசுவை சந்தித்து கலந்துரையாடினார். அகமதாபாத் மாநகராட்சி வளர்ச்சி திட்டங்கள் குறித்து அப்போது அவர் எடுத்துரைத்தார். அவர் கூறுகையில், ”சபர்மதி நதியை நவீனப்படுத்தும் திட்டம் 1995-97ல் திட்டமிடப்பட்டு 2005ம் ஆண்டு பணிகள் துவக்கப்பட்டன. 1500 கோடி ரூபாய் மதிப்பில் 23 கிலோமீட்டர் தூரத்திற்கு இதுவரை இந்த திட்டம் நவீனப்படுத்தப்பட்டது.
நதிக் கரையிலிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சலவைத் தொழிலாளர்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. 204 ஹெக்டேர் பரப்பளவில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதிநவீன பொது போக்குவரத்துடன் அதிநவீன பேருந்து வசதிகள் கொண்டுவரப்படவுள்ளன. இதன் மூலம், பொது போக்குவரத்தின் பயன்பாடு அதிகரிக்கும்.
2009-ம் ஆண்டு 60 கிலோமீட்டர் தொலைவிற்குள் 60 பேருந்துகள் இயக்கப்பட்டது. தற்போது 135 கி.மீ. தொலைவிற்குள் 380 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதன் மூலம் தினமும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்கின்றனர். சாலைகளில் பேருந்துகளுக்கு என தனி வழி தடங்கள் அமைப்பதன் மூலம் பயண நேரம் குறைக்கப்படும்.
அகமதாபாத் மாநாகராட்சியில் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்குச் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் ஆணையர் தென்னரசு தெரிவித்தார்.
இந்த முழு செய்தி கீழே வீடியோவாக கொடுக்கப்பட்டுள்ளது:







