கோவை நீதிமன்றம் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை நீதிமன்ற வளாகம் அருகே நேற்று காலை கோகுல் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டார். கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த கோகுல் கடந்த 2021ம் ஆண்டு குரங்கு ஶ்ரீராம் என்ற இளைஞரின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஆவார். ஜாமீனில் இருந்த அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது இந்த சம்பவம் நடந்தது. அவருடன் வந்த அவரின் நண்பரான சரவணம்பட்டியைச் சேர்ந்த மனோஜ் என்பவரையும் அந்த கும்பல் தாக்கியது.
கோகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மனோஜ் சிகிச்சை பெற்று வருகிறார். பட்டப் பகலில் இந்தச் சம்பவத்தை செய்து விட்டு, கொலையாளிகள் பைக்கில் ஏறிச் சென்றனர். இதுகுறித்து போலீஸார் 5 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்தனர். இந்த மர்ம கும்பலைச் சேர்ந்த ஒருவரின் செல்போன் சிக்னல் நீலகிரியில் பதிவானது. இதையடுத்து நீலகிரியில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது.
கோத்தகிரியில் நடந்த வாகன சோதனையில் ஜோஸ்வா தேவபிரியன், கௌதம், அருண்குமார், பரணி, ஹரி ஆகிய 5 பேர் சிக்கினர். குன்னூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்ற மேலும் இரண்டு பேரை போலீஸ் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் கோவை அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
-ம.பவித்ரா








