கட்சிகளுக்கு நன்கொடை – ரூ. 614 கோடியை பெற்ற பாஜக

கடந்த 2021-22ம் நிதியாண்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு 614 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக ஜனநாயக சீர்திருத்தத்துக்கான கூட்டமைப்பு (ஏடிஆர்) தகவல் வெளியிட்டுள்ளது. தேசிய கட்சிகளுக்கு 20,000 ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்ட நன்கொடை  பற்றிய…

கடந்த 2021-22ம் நிதியாண்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு 614 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக ஜனநாயக சீர்திருத்தத்துக்கான கூட்டமைப்பு (ஏடிஆர்) தகவல் வெளியிட்டுள்ளது.

தேசிய கட்சிகளுக்கு 20,000 ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்ட நன்கொடை  பற்றிய விவரங்களை ஏடிஆர் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 2021-ம் நிதியாண்டில் மொத்தம் 7,141 நன்கொடைகள் தேசிய கட்சிகளுக்கு வழங்கபட்டுள்ளன. இதன் மதிப்பு 780.77 கோடி ரூபாய்.

இதுதொடர்பாக ஏடிஆர் வெளியிட்டுள்ள அறிக்க்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 2021-22ம் நிதியாண்டில் மொத்தம் பாஜகவுக்கு 4,957 நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நன்கொடை மூலம் 614.626 கோடி ரூபாய் பாஜகவுக்கு கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 1,255 நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் காங்கிரஸ் கட்சிக்கு 95.45 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

கடந்த 2021-22ம் நிதியாண்டில்  தேசிய கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடை முந்தைய நிதியாண்டை காட்டிலும் 31.50 சதவீதம் அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டை காட்டிலும் கிட்டத்தட்ட 187 கோடி ரூபாய் அதிகமாக தேசிய கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

அண்மைச் செய்தி: அதானி விவகாரம்: 5 கேள்விகளுடன் பிரதமருக்கு காங்கிரஸ் எம்பி கடிதம்

முந்தைய நிதியாண்டை காட்டிலும் கடந்த 2021-22ம் நிதியாண்டில் பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ள நன்கொடை 28.71 சதவீதம் அதிகரித்துள்ளது. 2020-21ம் நிதியாண்டில் பாஜகவுக்கு 477.545 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு முந்தைய நிதியாண்டை காட்டிலும் கடந்த 2021-22ம் நிதியாண்டில் 28 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2020-21ம் நிதியாண்டில் காங்கிரஸ் கட்சிக்கு 74.524 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஏடிஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.