சுதந்திர தினம், குடியரசு தினம் இவற்றையெல்லாம் விட ஜி.எஸ்.டி 5-ஆம் ஆண்டு தினம் மிக முக்கியமானது எனத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று ஜி.எஸ்.டி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதின் ஒரு பகுதியாகச் சென்னை கலைவானர் அரங்கில் 5வது தேசிய ஜி.எஸ்.டி தினமானது, ஜி.எஸ்.டி கவுன்சில் சார்பாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, ஜி.எஸ்.டி ஆணையர் எம்.வி.எஸ்.சௌத்ரி மற்றும் பிற ஜி.எஸ்.டி அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்குச் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. அதன் பின் மேடையில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, நம்முடைய சுதந்திர தினம், குடியரசு தினத்தை விட, இது மிக முக்கியமான தினம் எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், பிரிட்டிஷ் காரர்கள் நம்மை ஆண்ட பிறகு மிக முக்கியமான நாளாக 5வது ஜி.எஸ்.டி தினம் பார்க்கப்படுகிறது. ஒரு பாரதம் உன்னத பாரதம் என்பது அரசியல் சட்ட அமைப்பிலேயே உள்ளது எனக் கூறினார்.
இந்த சமூகத்தை நாம் எந்த பார்வையில் பார்க்கிறோம் என்பதில் உள்ளது எனத் தெரிவித்த அவர், இதைப் பிரித்துப் பார்த்தால் பல விதமாகப் பார்க்கலாம். கூட்டாட்சி பற்றிப் பேசுவது மிகவும் முக்கியம் அதே சமயம் இந்திய நாடு மிக நீண்ட வருடத்திற்கு முன்பே பிறந்துவிட்டது. இந்த நாடு பல மாநிலமாகப் பிரிந்து உள்ளது. ஆனால், நம் முன்னோர்களின் பாரத நாடு என்ற எண்ணம் முற்றிலும் வேறுபட்டது. இந்த நாடு ஒரு அகண்ட பாரதம். பாரதம் என்பது ஒன்றே. பாரதத்தில் பல மொழி கலாச்சாரம் உள்ளது, அதுவே பாரதத்தின் அழகு எனப் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், விவேகானந்தரும், பாரதியாரும் அவர்களுடைய பாடலில் அகண்ட பாரதம் பற்றிக் கூறியுள்ளார் “வேதம் நிறைந்த தமிழ்நாடு, உயிர் வீரம் செழிழ்ந்த தமிழ்நாடு இந்த நாட்டில் பல சந்தைகள் உள்ளது, இதில் எதாவது தொழில் செய்ய வேண்டும் என்றால் பல பிரச்சனைகள் உள்ளது. ஆனால், சர்தார்பட்டேல் எப்படி இந்த நாட்டை ஒன்றாக இணைக்க முயற்சி செய்தாரோ, அதே போலத் தான் ஜி.எஸ்.டி மூலம் ஒரே நாடு ஒரே வரி என்பது மூலம் ஒன்று இணைகிறது. ஜி.எஸ்.டி மக்களுக்கு, வியாபாரிகளுக்கு எளிமையாக்கி உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 4 வருடத்தில் ஜி.எஸ்.டி மூலம் 35 கோடி முதல் 1500 கோடி வரை லாபம் உயர்ந்துள்ளது எனத் தெரிவித்த அவர், அடுத்த 25 வருடத்தில் உலக அரங்கில் இந்திய பலமான நாடாக இருக்கும் என்று தெரிவித்தார்.








