குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு-செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் முதலிடம்

66 பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற குரூப் 1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா மாநில அளவில் முதலிடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழ்நாடு அரசில்…

66 பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற குரூப் 1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா மாநில அளவில் முதலிடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

தமிழ்நாடு அரசில் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர் உள்ளிட்ட குரூப் 1 பணியிடங்களில் காலியாக உள்ள 66 இடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2021 ஜனவரி 3-ம் தேதி நடைபெற்றது.

முதல்நிலைத் தேர்வு முடிவுகள் கடந்த 2021 டிசம்பர் 14-ம் தேதி வெளியாகின.

அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த மார்ச் 4,5 & 6 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. முதன்மைத் தேர்வை 3,800 பேர் எழுதிய நிலையில், அதில் 137 பேர் மட்டும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

முதலிடம் பிடித்த லாவண்யா

137 பேருக்கும் கடந்த 3 தினங்களாக நேர்காணல் நடைபெற்று வந்த நிலையில், தற்போது தகுதியானவர்களின் விவரங்களை TNPSC வெளியிட்டுள்ளது. நேர்காணலில் பங்கேற்ற 137 நபர்களின் விவரங்களும் http://www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

முதன்மைத் தேர்வு மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வு மதிப்பெண்கள் ஒன்றாக கணக்கிடப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் இட ஒதுக்கீடு அடிப்படையில் தகுதியான நபர்கள் 66 பணியிடங்களுக்கும் தேர்வாக உள்ளனர்.

முதன்முறையாக இந்த தேர்வு முடிவுகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான முன்னுரிமையும் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.