தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமாக உள்ளதாகக் காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமாக உள்ளதாகக் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா நோய்த் தொற்று அறிகுறிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், தொடர்ந்து இன்னும் சில நாட்களுக்கு அவருக்கு ஓய்வு தேவைப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விரைவில் மருத்துவமனையிலிருந்து முதலமைச்சர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை எழும்பூர் குடும்ப நலப் பயிற்சி நிலையத்தில் 18 முதல் 59 வயதினருக்கு அரசு கோவிட் தடுப்பூசி மையங்களில் இலவசமாக முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவிலேயே வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது தமிழ்நாட்டில் தான் எனக் கூறினார்.
அண்மைச் செய்தி: ‘முதலமைச்சர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வரச் சிறப்புப் பிரார்த்தனை’
தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு வாரம்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது தமிழகத்தில் தான் எனவும், இதுவரை 11.63 கோடி தடுப்பூசிகள் தமிழ்நாட்டில் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், செப்டம்பர் மாதத்திற்குள் 30 இலட்சம் தடுப்பூசிகள் காலாவதியாவதைத் தடுப்பதற்குத் தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி செலுத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் நலமாக உள்ளதாகவும், இன்று அல்லது நாளை வீடு திரும்புவார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.








