செங்கல்பட்டு சாலை விபத்து; முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

செங்கல்பட்டு அருகே அரசுப் பேருந்தும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள தொழுப்பேடு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்…

செங்கல்பட்டு அருகே அரசுப் பேருந்தும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள தொழுப்பேடு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, முன்னால் சென்ற இரும்பு ஏற்றிச் சென்ற லாரி மீது மோதியது. இதில், பேருந்தில் பயணம் செய்த 3 ஆண்கள், 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து, காயமடைந்தவர்கள் மேல் மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது மேலும், நான்கு பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இதையடுத்து போலீசார் உடல்களை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், ஒரு மணி நேரத்துக்கு மேலாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அண்மைச் செய்தி: ‘நடிகர் விக்ரமுக்கு உடல்நலக்குறைவு; மருத்துவமனையில் சிகிச்சை’

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பேருந்து ஒன்று கன்டெய்னர் லாரியின் பின்புறம் மோதியதில் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்ததாகவும், உயிரிழந்தவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதாகக் கூறியுள்ளார். மேலும், இதே விபத்தில் காயமடைந்த ஒன்பது நபர்களுக்குச் சிறப்பான சிகிச்சை வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் ஐந்து இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரமும் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.