தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழகம் முழுவதும் 92 பதவிகளுக்கான குரூப் 1 முதல் நிலை தேர்வு இன்று தொடங்கியது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 முதல் நிலை தேர்வு தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 1080 மையங்களில் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 149 இடங்களில் நடக்கிறது.
குரூப்-1 பதவியில் காலியாக உள்ள துணை ஆட்சியர் 18 இடங்களும், துணை காவல் கண்காணிப்பாளர் 26 இடங்களும், வணிகவரித்துறை உதவி ஆணையர் 25 இடங்களுக்கும், கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் 13 இடங்களுக்கும், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் 7 இடங்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பு துறை அதிகாரிகள் 3 பதவிகள் என மொத்தம் 92 இடங்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்காகத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு 3,22,416 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 3,22,414 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
இந்த தேர்வு காலை 9:30 மணி தொடங்கி மதியம் 12:30 மணி வரை நடக்கும். தேர்வுக்கு அரை மணி நேரம் முன்னதாகவே தேர்வர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தாமதமாக வருபவர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது.
இதில் 24 மூன்றாம் பாலினத்தவர் உட்பட 1,56, 833 ஆண்களும் 1,65,557 பெண்களும் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு எழுத வந்தவர்கள் பல நாட்களாக தங்களைத் தயார்ப் படுத்தி இந்த தேர்வு எழுத வந்துள்ளதாகவும் தேர்வு கடினமாக இருந்தாலும் நிச்சயம் வெற்றி பெறவும் என நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.
தேர்வு எழுத இருப்பவர்கள் தங்களுடன் மின்னணு சாதனங்களான கடிகாரம் உள்ளிட்ட பொருட்களை தேர்வறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வருவதற்கு எல்லா வருடமும் ஏற்பாடு செய்வது போல் சிறப்பு பேருந்துகள் செயல்படுத்தப்பட்டன.







