தமிழகத்தில் பசுமை வழி விமானநிலையம்- மத்திய அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் சென்னை அருகே பசுமை வழி விமான நிலையத்தை அமைப்பதற்கு சிறப்பு அனுமதி கோரி தமிழக அரசிடம் இருந்து எவ்வித மனுவும் கிடைக்கவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர்…

தமிழகத்தில் சென்னை அருகே பசுமை வழி விமான நிலையத்தை அமைப்பதற்கு சிறப்பு அனுமதி கோரி தமிழக அரசிடம் இருந்து எவ்வித மனுவும் கிடைக்கவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பசுமை வழி விமான நிலையங்கள் அமைக்கக்கூடிய பணிகள் தொடர்பாகவும் குறிப்பாக தமிழகத்தில் பசுமை வழி விமான நிலையங்கள் அமைக்கப்படுகிறதா? அதனுடைய தற்போதைய நிலை என்ன? என்பது குறித்து மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே சிங், கோவா மாநிலத்தில் மோபா, சீரடி,மகாராஷ்டிரா மாநிலத்தில் சிந்துதுர்க், கலபுர்கி, விஜயபுரா உட்பட நாடு முழுவதும் 21 இடங்களில் பசுமை வழி விமான நிலையங்கள் அமைப்பதற்கு கொள்கை ரீதியில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் பசுமை வழி விமான நிலையத்தை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு நான்கு இடங்களை தேர்வு செய்து அனுப்பியது. இந்திய விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் அதிகாரிகள் இணைந்து 4 இடங்களில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டதில் இரண்டு இடங்களில் பசுமை வழி விமான நிலையங்களை அமைப்பதற்கு சாத்தியமான சூழல் இருப்பதாக கண்டறியப்பட்டது.

இந்நிலையில் பசுமை வழி விமான நிலையத்தை சென்னைக்கு அருகில் அமைக்க 2008 விதிமுறை படி ( Site Clearance approval ) சிறப்பு அனுமதி கோரி எவ்வித மனுவும் மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசிடமிருந்து கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.