தமிழ்நாட்டில் அதிகளவில் தொழில் முதலீடுகள் மேற்கொள்ள வேண்டும் – ஜெட்ரோ அமைப்புக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழில் முதலீடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். சென்னையில் 2024ம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு…

தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழில் முதலீடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

சென்னையில் 2024ம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், கடந்த 23ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு பல்வேறு நிறுவன தலைவர்களையும், அமைச்சர்களையும் முதலமைச்சர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூரில் 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 25ஆம் தேதி அன்று இரவு ஜப்பான் நாட்டின் ஒசாகா மாகாணம் வந்தடைந்தார். தொடர்ந்து, அதனைத் தொடர்ந்து 26 ஆம் தேதி அன்று காலை ஓசாகாவில், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் (Japan External Trade Organization – JETRO) இணைந்து நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்ளவும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்து உரையாற்றினார்.

இதனையடுத்து, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பிறகு ஜப்பான் நாட்டின் பல்வேறு நிறுவனங்களின் முதன்மை அலுவலர்களுடனான மதிய உணவுடன் கூடிய சந்திப்பு நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஒசாகா மாகாணத்தின் துணை ஆளுநர் நோபுஹிகோ யமாகுஜிப்பான், நாட்டின் பழம்பெரும் கோட்டையான ஒசாகா கோட்டையின் சிறப்பைப் பற்றி எடுத்துக்கூறி அதனை பார்வையிடுமாறு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பினையேற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஜப்பான் நாட்டின், ஒசாகாவில் உள்ள 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலகப் புகழ்பெற்ற ஜப்பான் நாட்டின் கோட்டையான ஒசாகா கோட்டையை பார்வையிட்டார்.

இதனையடுத்து, ஒசாகாவில் தனது இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டோக்கியோ மாநகரத்திற்கு புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதற்காக நேற்று காலை புல்லட் ரயில் மூலம் பயணம் மேற்கொண்டார்.

பின்னர் டோக்கியோ சென்றடைந்த அவர், அங்கு ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தலைவர் இஷிகுரோ நோரிஹிகோ, செயல் துணைத் தலைவர் கசுயா நகஜோ ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு அளித்து வரும் ஆதாரவிற்கு நன்றி தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழில் முதலீடுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். அடுத்தாண்டு சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்.

முதலமைச்சரின் அழைப்பிற்கு பதிலளித்த JETRO தலைவர் இஷிகுரோ நோரிஹிகோ, தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள ஜப்பான் நாட்டு நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அழைப்பு விடுத்ததற்கும், ஜப்பான் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட தமிழ்நாடு அரசு அளித்து வரும் ஆதரவிற்கும் தனது நன்றியை தெரிவித்ததுடன், சென்னையில் நடைபெறவுள்ள 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி பெற தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், தொழில்த் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில் மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.