“அவர் எப்போதும் என்னை ஏமாற்றியதில்லை” – ஆஷிஷ் வித்யார்த்தியின் முன்னாள் மனைவி நெகிழ்ச்சி!

”இன்னொரு திருமணம் செய்துகொள்வதற்காக என்னை விவாகரத்து செய்யவில்லை, ஆஷிஷ் வித்யார்த்தி எப்போதும் என்னை ஏமாற்றியதில்லை” என அவரின் முன்னாள் மனைவி ரஜோஷி பருவா கூறியுள்ளார். தமிழில் பெரும்பாலும் வில்லன் நடிகராக அறியப்படும் ஆஷிஷ் வித்யார்த்தி …

”இன்னொரு திருமணம் செய்துகொள்வதற்காக என்னை விவாகரத்து செய்யவில்லை, ஆஷிஷ் வித்யார்த்தி எப்போதும் என்னை ஏமாற்றியதில்லை” என அவரின் முன்னாள் மனைவி ரஜோஷி பருவா கூறியுள்ளார்.

தமிழில் பெரும்பாலும் வில்லன் நடிகராக அறியப்படும் ஆஷிஷ் வித்யார்த்தி  கில்லி, ஆறு, கந்தசாமி, உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்து தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் 300- க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் தமிழில் இவர் நடித்த தில், கில்லி ஆகிய படங்கள் என்றும் மறக்க முடியாதவை.

நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி ஏற்கனவே முன்னாள் நடிகை சகுந்தலா பருவாவின் மகளும், நடிகையும், பாடகியுமான ரஜோஷி பருவாவை முதலாவதாக திருமணம் செய்திருந்தார். இருவரும் பிரிந்துவிட்ட நிலையில், இவர் தற்போது அசாமை சேர்ந்த தொழில்முனைவோரான ருபாலி என்பவரை கொல்கத்தாவில் உறவினர்கள் முன்னிலையில் வைத்து  எளிமையாக தனது 60வது வயதில் பதிவுத் திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில், அவரது முன்னாள் மனைவி ரஜோஷி பருவா தங்கள் பிரிவு குறித்து பேட்டி அளித்துள்ளார். அவர் அந்த பேட்டியில் கூறியதாவது:

“நானும் ஆஷிஷும் கடந்த 2021-ல் விவாகரத்து பெற்றோம். அதை நாங்கள் வெளி உலகிற்கு பிரபலப்படுத்த விரும்பவில்லை. ஆஷிஷுடனான எங்களுடைய 22 ஆண்டு கால வாழ்க்கை மிக சந்தோஷமானது. எங்களுக்குள் நிறைய ஒற்றுமையும் உண்டு, வேற்றுமையும் உண்டு. ஆனால், நாங்கள் அதன் நிமித்தமாக ஒருபோதும் மோதிக் கொண்டதில்லை. ஒரு கலைஞராக நான் விரும்புவதை செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. என் தேவை என்னவென்பதை உணர்ந்தபோது, ஆஷிஷின் எதிர்கால தேவைகளும், என்னுடைய தேவைகளும் வெவ்வேறு என புரிந்தது. அதுதான் எங்களுடைய பிரிவுக்கு காரணமாக இருந்தது.

எங்களுடைய மகன் ஆர்த் வித்யார்த்தி, இப்போது வெளிநாட்டில் டெஸ்லா நிறுவனத்தில் வேலை செய்கிறார். பொதுவாகவே குழந்தையை வளர்ப்பதில் மனைவி தான் பெரும் பங்காற்றுவார்கள். ஆனால் எங்கள் மகனை வளர்த்ததில் ஆஷிஷுக்குதான் பெரும் பங்கு இருக்கிறது. ஆர்த் எங்களுக்குள் ஏற்பட்ட பிரிவு உள்ளிட்ட அனைத்தையும் நன்றாக புரிந்து கொண்டார்.

எங்கள் பிரிவை ஆஷிஷ் தான் அழகானதாக மாற்றினார். அவரது ஆதரவு இல்லாவிட்டால் இது நடந்திருக்காது. வழக்கமாக விவாகரத்தில் ஈடுபடும் தம்பதிகளுக்கு நடுவே பல சண்டைகளும், மனக்கசப்புகளும்  நடக்கும். ஆனால் எங்கள் விவாகரத்தில் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. அதை எளிமையாக்கினார் ஆஷிஷ்.

இருவரின் பிரிவுக்குப் பின்னர் கஷ்டம் இருந்ததாக நிறைய ஊகங்கள் உலா வருகின்றன. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இரண்டு ஆண்டுகளாக நாங்கள் வெவ்வேறு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். அவர் இப்போது இன்னொரு திருமணம் செய்துள்ளார். அதற்காகத் தான் அவர் என்னை விவாகரத்து செய்தார் போன்ற பேச்சுக்கள் முட்டாள் தனமானவை. அவர் எப்போதும் என்னை ஏமாற்றியதில்லை.

அதேபோல் நானும் இன்னொரு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏனென்றால் என் தேவை திருமணம் இல்லை. அவருக்கு துணை தேவைப்பட்டதால் மற்றொரு திருமணம் செய்து கொண்டார். நான் என் வாழ்நாளின் பெரும் பகுதியை சகுந்தலா பாருவாவின் மகளாகவும், ஆஷிஷ் வித்யார்த்தியின் மனைவியாகவும் கடந்துவிட்டேன். இப்போது என் வழியில் செல்கிறேன். அதற்காக இத்தனை காலம் என் அடையாளத்தை அழித்துவிட்டேன் என்றில்லை. நான் இப்போது என் அடையாளத்தை வேறு பாதையில் தேடுகிறேன்” என்று ரஜோஷி பருவா கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.