டி20 உலகக்கோப்பை – அயர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி!

டி20 உலகக்கோப்பை தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.  9வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. …

டி20 உலகக்கோப்பை தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 

9வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.  இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 36-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் – அயர்லாந்து அணிகள் மோதின.  இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான பால்பிர்னி டக் அவுட்டிலும்,  அவரை தொடர்ந்து டக்கர் 2 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.  அந்த அணியில் டெலானி ஒரளவு ரன்கள் சேர்த்தார்.  மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.  கடைசி கட்ட ஓவர்களில் ஜோஷ்வா லிட்டில் அணிக்கு ரன்கள் சேர்த்தார்.

20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த அயர்லாந்து 106 ரன்கள் அடித்தது.  அணியில் அதிகபட்சமாக டெலானி 31 ரன்களும், லிட்டில் 22 ரன்களும் அடித்தனர்.  பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஷாகீன் அப்ரிடி, இமாத் வாசிம் தலா 3 விக்கெட்டுகளும், முகமது அமீர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.  இதனையடுத்து 107 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.

அயர்லாந்து அணியின் அபார பந்துவீச்சால் அணியில் முன்னனி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.  இருப்பினும் கேப்டன் பாபர் அசாம் நிலைத்து ஆடினார்.  அதிகபட்சமாக பாபர் அசாம் 32 ரன்கள் எடுத்தார்.  அயர்லாந்து அணி சார்பில் பாரி மெக்க்ரத்தி 3 விக்கெட்டை கைப்பற்றினார்.  இறுதியில் பாகிஸ்தான் அணி 18.5 ஓவர்களில் இலக்கை கடந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், ஆறுதல் வெற்றியுடன் உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றுடன் பாகிஸ்தான் வெளியேறியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.