நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்திய அகிலேஷ் யாதவ்! தமிழ்நாட்டின் சமூக நீதிக் குரலை எதிரொலித்ததாக நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே ‘ஒரே நாடு ஒரே கோரிக்கை’ என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியிருந்த நிலையில், தமிழ்நாட்டின் சமூக நீதிக் குரலை உரக்கவும், தெளிவாகவும் எதிரொலித்த…

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே ‘ஒரே நாடு ஒரே கோரிக்கை’ என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியிருந்த நிலையில், தமிழ்நாட்டின் சமூக நீதிக் குரலை உரக்கவும், தெளிவாகவும் எதிரொலித்த அகிலேஷ் யாதவுக்கு நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மருத்துவ படிப்புகளில் மாணவ, மாணவிகள் சேர உதவும் நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வு நடைபெற்ற தினத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்ததாகவும், ஆள்மாறாட்டம் நடந்ததாகவும் புகார் எழுந்தது. ஆனால், இதை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) மறுத்திருந்தது.

இதனிடையே, இம்மாத தொடக்கத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாயின.  இதில் ஹரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் படித்த 6 பேர் 720 மதிப்பெண்கள் பெற்றதும், 1.563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இதைத் தொடர்ந்து 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாகவும், அவர்களுக்கு 23-ம் தேதி மறு தேர்வு நடத்துவதாகவும் மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.  இதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.

இந்த நிலையில்,  நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே ‘ஒரே நாடு ஒரே கோரிக்கை’ என சமாஜ்வாதி கட்சி தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.  இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “தமிழ்நாட்டின் சமூக நீதிக் குரலை உரக்கவும், தெளிவாகவும் எதிரொலித்த சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு நன்றி” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.