நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே 20-க்கும் மேற்பட்ட கல்லறைகளை மர்ம நபர்கள் அடித்து நாசம் செய்ததையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் அம்பை அடுத்த சிவந்திபுரம் ஊராட்சி உதிரமுத்தான்பட்டியில்
சுமார் 2000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் அங்குள்ள இடுகாட்டை பயன்படுத்தி வருகின்றனர். அங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட கல்லறைகள் உள்ளன.
இந்த நிலையில் திடீரென அப்பகுதியில் புகுந்த மர்ம நபர்கள் 20க்கும் மேற்பட்ட கல்லறைகளை அடித்து உடைத்து நாசம் செய்தனர் . இது குறித்து ஊர் பொதுமக்கள் விக்ரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த வி .கே.புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
–ரூபி.காமராஜ்







