பாசம் காட்டி தனியே விட்டுப் போன எஜமான் – பேருந்து நிலையம் முழுதும் தேடி வந்த நன்றியுள்ள ஜீவன்!

செங்கத்தில் ஒரு பாசப் போராட்டம் – தன்னை விட்டுப் பிரிந்து சென்ற எஜமானை ஒவ்வொரு பேருந்தாக தேடி வந்த நன்றியுள்ள ஜீவன். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள்…

செங்கத்தில் ஒரு பாசப் போராட்டம் – தன்னை விட்டுப் பிரிந்து சென்ற எஜமானை ஒவ்வொரு பேருந்தாக தேடி வந்த நன்றியுள்ள ஜீவன்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் பெரும்பாலும் பெங்களூரு, திருப்பூர், கோவை மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கூலி வேலைக்கு செல்பவர்கள். இவர்கள் பெரும்பாலும் செங்கம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து செல்வது வழக்கம்.

அதே போன்று இன்று காலை கூலி வேலைக்குச் சென்ற ஒரு குடும்பத்தினர் தான் வளர்த்த நன்றியுள்ள ஜீவனான நாயை வீட்டிலேயே விட்டு விட்டு வெளியூர் சென்றுள்ளனர். ஆனால் தன் எஜமானர்களை பின்தொடர்ந்து வந்த அந்த நன்றியுள்ள ஜீவன், தன்னை  அவர்கள் விட்டுச் சென்றது தெரியாமல் தன் எஜமானர்களை செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ளே வரும் மற்றும் வெளியே செல்லும் பேருந்துகளில் தேடியது.

தன் எஜமானர்களை தேடி பாசப் போராட்டத்தை நடத்தி வந்த அந்த நாயின் செயலைக் கண்டு செங்கம் பேருந்து நிலையத்தில் உள்ள அனைவருமே வியந்தனர்.

சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக பாசப் போராட்டத்தில் ஈடுபட்ட அந்த நன்றியுள்ள ஜீவன் தன் எஜமானர்களை கண்டுபிடிக்க முடியாமல் மீண்டும் தனது சொந்த ஊரை நோக்கி சென்றது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.