மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்த ஆறு மாதங்களுக்குள் பட்டம் வழங்க வேண்டுமென உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு செயலாளர் ராஜ்னிஷ் ஜெயின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், பட்டப்படிப்பை முடித்த பின்னரும் பல நிறுவனங்கள் மதிப்பெண் சான்றிதழையும் பட்டத்தையும் மாணவர்களுக்கு வழங்குவதில்லை என புகார்கள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
காலதாமதமாக பட்டம் வழங்கப்படுவதால் உயர்கல்வியில் சேர்வதிலும், வேலைவாய்ப்பு கிடைப்பதிலும் மாணவர்களுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ராஜ்னிஷ் ஜெயின், மாணவர்கள் வெற்றிகரமாக படிப்பை முடித்துவிட்டால் அவர்களுக்கு 180 நாட்களுக்குள் அதாவது ஆறு மாதங்களுக்குள் கல்வி நிறுவனங்கள் பட்டம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
உடனடியாக பட்டம் வழங்காத கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கடிதத்தில் எச்சரித்துள்ளார்.







