மீனாட்சி திருக்கல்யாணம்: “பாஸ் இல்லைனா, அமைச்சராவே இருந்தாலும் அனுமதி இல்ல”

மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு பாஸ் இல்லையென்றால் அமைச்சரே ஆனாலும் அனுமதிக்கக் கூடாது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். மதுரை சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி…

மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு பாஸ் இல்லையென்றால் அமைச்சரே ஆனாலும் அனுமதிக்கக் கூடாது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

மதுரை சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அப்போது பேசிய மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், திருவிழா முன்னேற்பாடாக 10 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளதாகவும், பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், கள்ளழகருக்கு முன்னும், பின்னும் ஆயுதம் ஏந்திய காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு ஒருங்கிணைந்த முறையில் பாஸ் வழங்க வேண்டும் எனக் கூறினார். பாஸ் உள்ளவர்களை மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும், பாஸ் இல்லையென்றால் அமைச்சரே ஆனாலும் அனுமதிக்கக் கூடாது எனவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.