முக்கியச் செய்திகள் தமிழகம்

வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை-அண்ணாமலை கோரிக்கை

நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்று  தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நாடு முழுவதும் சுதந்திர தின பொன்விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மகிழ்ச்சிகரமான வேளையிலே, அந்த மகிழ்ச்சியைச் சீர் குலைக்க, இந்திய ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்

ஜம்மு-காஷ்மீரில் ராஜௌரி மாவட்டத்தில் ராணுவ முகாம் மீது தற்கொலைப் படையைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் நடத்திய திடீர்த்தாக்குதல், இந்திய நாட்டின் பாதுகாப்பு படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது

இருதரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் உட்பட 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் எய்தினர்.

எதிர்த்தரப்பில் 2 பயங்கரவாதிகள் இருவரும், சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளின் திடீர் தாக்குதலில், தமிழக ராணுவ வீரர் லக்ஷ்மணன் வீரமரணம் அடைந்துள்ள செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

நாடும் மக்களும் நலமாக இருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கிலே எல்லைகளைப் பாதுகாக்கும் நம் ராணுவ வீரர்களின் விலை மதிப்பில்லாத உயிர் தியாகத்திற்கு நம் நாடு என்றென்றும், நன்றிக் கடன்பட்டுள்ளது.

சுதந்திர இந்தியாவின் இறையாண்மைக்கு பெருமை சேர்க்கும் வகையில், தன் இன்னுயிரைத் தியாகம் செய்த இந்நால்வரின் தியாகமும் நம் நாட்டு மக்களால் மறவாது, நினைந்து போற்றப்படும்.

நாமெல்லாம் தேசத்தின் பல மூலைகளில் பாதுகாப்பாக அமர்ந்து கொண்டு, பல திருவிழாக்களையும், கொண்டாட்டங்களையும், எந்தவித இடையூறும் இல்லாமல் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

இதற்கெல்லாம் மூல காரணம் உயிரை உறைய வைக்கும் பனியிலும், உயிருக்கு உத்தரவாதமில்லாத பணியிலும் நமது எல்லையைக் காக்கும் ராணுவ வீரர்கள் இரவு பகலாக பணியாற்றி தரும் பாதுகாப்பு பணியே ஆகும்.

தன் குடும்பத்தை பிரிந்து, கொண்டாட்டங்களை மறந்து, சுப, துக்க நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ள முடியாமல், பெற்ற பிள்ளைகளுடன் பொழுதை கழிக்க முடியாமல், பனிப் பாறையிலும், கடுமையான சூழலிலும், துணிச்சலுடன் நம் வீரர்கள் போராடி வருகிறார்கள்.

இந்த வீரர்களின் தியாகத்திற்கு வானமே எல்லை. எல்லையைக் காக்கும் இராணுவ வீரர்களின் உயிருக்கு உத்திரவாதமில்லை என்று தெளிவாக உணர்ந்திருந்தும், ஆனால் நமக்கு அவர் உயிருக்கும், உடமைக்கும், அமைதிக்கும், உத்திரவாதம் தருகிறார்கள். என்னே உயர்ந்த பண்பு!

வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின கொண்டாட்டத்தை நாம், நடத்திக்கொண்டிருக்கும்போது சியாச்சின் பனிமலை உச்சியிலே, உதிரத்தை உறையச் செய்யும் மைனஸ் 50 டிகிரி குளிரில், மனிதன் உயிர்வாழ எந்த சாத்தியக் கூறும் இல்லாத அந்த பனிப்பாறையிலும், நமக்காக இரவு பகலாக காவல் காக்கும், நம் இராணுவ வீரர்களும் கொடியேற்ற போகிறார்கள்.

ஜெய் ஹிந்த், வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய் என்ற வீர கோஷங்கள் மலைகளில் எதிரொலிக்கும்.

நம் இராணுவ வீரர்களின், தேசபக்தியும், துணிச்சலும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.

ஆகவே இந்த சுதந்திர தின பொன்விழாவைக் கொண்டாடும் வேளையிலே நமக்காகவும், நம் நாட்டுக்காகவும், தன் இன்னுயிரை தியாகம் செய்து, போரில் வீரமரணமடைந்த, நம் இராணுவ வீரர்களை நினைவில் கொள்வோமாக!

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் உயிரிழந்த மதுரையைச் சேர்ந்த வீரர் லட்சுமணன் அவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிர் நீத்த வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஜேஇஇ 3-ம் கட்ட தேர்வுகள் இன்று தொடங்கியது

Gayathri Venkatesan

வடகொரியா அதிபராக பதவியேற்று 9 ஆண்டுகளை நிறைவு செய்த கிம்; கொண்டாட்டத்தில் மக்கள்

Niruban Chakkaaravarthi

புரட்டாசி மாத ஆன்மீக சுற்றுலா – இந்து அறநிலையத்துறை ஏற்பாடு

G SaravanaKumar