முக்கியச் செய்திகள் தமிழகம்

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்-பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

போதையின் பாதையிலிருந்து தமிழ்நாட்டை முற்றிலுமாக மீட்க வேண்டும், போதைப்பொருள் நடமாட்டத்திற்கு துணை செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க சர்வாதிகாரியாக மாறுவேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

போதைப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளின் சொத்துக்கள் முடக்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

விற்பனை செய்யும் வியாபாரிகள் அனைவரையும் கைது செய்தாக வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

போதைப் பழக்கம் என்பது ஒரு சமூகத்தீமை. கடைக்காரர்கள் போதைப் பொருட்களை விற்க மாட்டேன் என்று உறுதி எடுக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகே அவை கிடைக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை பயன்பாடு பெருகிக் கொண்டிருக்கிறது. போதைக்கு அடிமையாகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருவதை நினைக்கும் போது கவலையும் வருத்தமும் கூடவே அதிகரிக்கிறது.

அழிவுப்பாதையான போதைப் பாதையை நமது முழு ஆற்றலையும் பயன்படுத்தி தடுத்தாக வேண்டும்; அதற்கான உறுதியை எடுத்தாக வேண்டும்.

போதைப் பொருட்கள் நம் மாநிலத்திற்குள் பரவுவது, விற்பனையாவது, பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்.

போதையைப் பயன்படுத்துபவர்களை அதிலிருந்து மீட்டு நல்வழிப்படுத்த வேண்டும். புதிதாக ஒருவர் கூட இந்த போதை பழக்கத்திற்கு ஆளாகி விடாமல் முனைப்புடன் இளைஞர் சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும்.

போதைப் பொருட்கள் என்பதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்று சொல்வதற்கு மிக முக்கிய காரணம் சமூகத்தில் நடைபெறும் குற்றங்களையும் தடுக்க வேண்டும் என்பதுதான்.

ஒருவர் போதையை பயன்படுத்தி தெருவில் விழுந்து கிடப்பதால் மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்கக் கூடாது. போதைப்பொருளால் தான் கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் நடைபெற்று வருகின்றன என்று தமிழக முதல்வர் பேசியிருக்கிறார்.

இதுபோன்ற ஒரு விழிப்புணர்வுடன் கூடிய ஒரு விளக்கத்தைத் தான் நான் தமிழக முதல்வர் அவர்களிடமிருந்து எதிர்பார்த்தேன். போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகளை இத்தனை விரிவாக, இத்தனை தெளிவாக நம் மாநிலத்தின் முதல்வர் அவர்கள் அறிந்திருக்கிறார் என்பதை நினைக்கும் போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.

ஆனால் போதைப் பழக்கத்தின் தீமைகளை பற்றி தெளிவாக அறிந்த நம் முதல்வருக்கு மதுபானம் தான் அதிக போதை தருகிறது என்பதை பற்றிய தெளிவு இல்லாமல் இருப்பது தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது.

தமிழகத்தில் போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையை எடுத்துக்கொண்டால் மதுபானத்திற்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை தான் மிக அதிகம். உழைக்கும் வர்க்கத்தினர் அனைவரும், தாங்கள் அன்றாடம் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் டாஸ்மாக்கில் கொடுத்துவிட்டு, குடும்பத்தை கவனிக்காமல் தவிக்க விடுகின்றனர்.

தன் சொந்த உடல் நலத்தையும், குடும்பத்தின் நலத்தையும் கெடுத்து, வருங்கால  தலைமுறைகளை படிக்கவிடாமல், மனோரீதியாக குழந்தைகள் பாதிக்கப்பட காரணமாக இருப்பது மதுப்பழக்கமே. முதல்வர் குறிப்பிட்ட கொலை, கொள்ளை, பாலியல் தொல்லைகள் ஆகியவற்றிற்கு மூலகாரணம் மதுபானமே.

தமிழகத்திலுள்ள பெண்களுக்கு தாலிக்கு தங்கம் கொடுக்கவில்லை. குடும்பத் தலைவிகளுக்கான உரிமை தொகையை கொடுக்கவில்லை. தங்க நகை கடன் தள்ளுபடி செய்யவில்லை. சிலிண்டருக்கு மானியம் கொடுக்கவில்லை.

இப்படியெல்லாம் பெண்களுக்கான நலத்திட்ட உரிமைகள், தமிழகத்தில் பெண்களுக்கு கொடுக்கப்படவில்லை; ஆனால் அவர்களுக்கு நிம்மதியையாவது கொடுங்கள்.

அரசு தானாக முன்வந்து மதுக்கடைகளை மூடினால், தமிழகத்தில் உள்ள பெண்கள் எல்லோரும் நிம்மதி அடைவார்கள்; குற்றங்கள் குறையும்.

தமிழகத்திலுள்ள மாணவர்களும் மாணவிகளும் மிக எளிமையாக மதுபானங்களை வாங்கி பயன்படுத்திய காணொளிகள் சமூக ஊடகங்களில் காணக் கிடைக்கின்றன.

வருங்கால சந்ததியை பாழாக்கி, குடிகெடுக்கும் மதுபானம் ஒரு ”போதைப் பழக்கம்” என்பதை தமிழகத்தின் முதல்வர், ஏன் உணராதது போல நடந்து கொள்கிறார் ?

குடும்பத் தலைவிகளுக்கான, பெண்களுக்கான, நலத்திட்டங்களைத்தான் நிறைவேற்ற மனமில்லை, குறைந்தபட்சம் டாஸ்மாக் கடைகளையாவது மூடுங்கள்.

குடும்பங்களைப், பெண்களை நிம்மதியாக வாழ வைக்கும் வகையில், தமிழக அரசின் மதுபானக் கடைகளை மூடும் முடிவை எடுக்கும்படி தமிழக முதல்வரை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று அந்த அறிக்கையில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மீனவர்களை விடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எல்.முருகன் கடிதம்

G SaravanaKumar

சொதப்பிய இந்தியா – சொல்லி அடித்த இங்கிலாந்து!

Web Editor

தமிழகத்தில் புதிதாக 759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

G SaravanaKumar