எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், மத்திய அரசு அனைத்து சூழ்நிலைகளுக்கும் தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
ஜூலை 20-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்தக்கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம், மத்திய அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துவது உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. இதனிடையே மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க தயார் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதல் இருந்தே மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றன. இதனால் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய கூட்டத்தொடரில் இதுவரை எந்த ஒரு முக்கியமான அலுவலும் நடத்த இயலாமல் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.
இதனால், நாடாளுமன்றத்தை தொடர்ந்து நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்பிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் தங்களது கோரிக்கையில் இருந்து எதிர்க்கட்சிகள் பின்வாங்கப் போவது இல்லை என்பதால், அமளிகளுக்கு இடையில் அலுவல்களை நடத்த அரசு முடிவெடுத்திருந்தது.
இந்த நிலையில், 5வது நாளாக இன்று தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மணிப்பூர் வீடியோ விவகாரம் குறித்து பிரதமர் மோடி மக்களவையில் பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 26 கட்சிகள் அடங்கிய I.N.D.I.A. கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்து, அதன்படி இன்று காலை 10 மணியளவில் மக்களவைச் செயலர் அலுவலகத்தில் காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோய் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை மக்களவைச் செயலாளர் நாயகத்திடம் வழங்கினார்.
இதனையடுத்து எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதற்கு எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடினார்.
மேலும் “நம்பிக்கையில்லா தீர்மானம் வரட்டும், எந்த சூழ்நிலைக்கும் அரசு தயாராக உள்ளது. மணிப்பூர் மீது விவாதம் வேண்டும்.. கூட்டத் தொடர் தொடங்கும் முன், அவர்கள் விவாதம் நடத்த வேண்டும் என்று விரும்பினார்கள். நாங்கள் ஒப்புக்கொண்டதும், விதிகள் குறித்த பிரச்னையை கொண்டு வந்தனர். விதிகள் தொடர்பாக நாங்கள் உடன்பாடு எட்டிய போது, பிரதமர் வந்து விவாதத்தை தொடங்க வேண்டும் என்று புதிய பிரச்னையை கொண்டு வந்தனர். இவை அனைத்தும் சாக்குப்போக்குகள் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா








