டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக நாராயணசாமியை நியமித்து ஆளுநர் உத்தரவு!

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் கே.நாராயணசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒருவருட காலமாக, டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி காலியாக இருந்த நிலையில், அந்த…

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் கே.நாராயணசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஒருவருட காலமாக, டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி காலியாக இருந்த நிலையில், அந்த பணியிடம் தற்போது நிரப்பப்பட்டுள்ளது. இதற்காக 3 பேர் பரிசீலிக்கப்பட்டு அது தொடர்பான பட்டியல் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது . இதனையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக பணியாற்றி வரும் கே. நாராயணசாமி டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான பணி ஆணையை ஆளுநர் ஆர்.ரன்.ரவி, கே.நாராயணசாமிக்கு இன்று நேரில் வழங்கினார். எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள நாராயணசாமி 3 ஆண்டுகள் பதவி வகிப்பார் . இந்த நிகழ்வின் போது, ஆளுநரின் செயலாளர் ஆனந்த் ராவ் விஷ்ணு பாட்டீல் ஐஏஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

மருத்துவ துறையில் 33 ஆண்டுகள் பணி அனுபவமும், 13 ஆண்டுகள் நிர்வாக அனுபவமும் கொண்டவரான கே.நாராயணசாமி சென்னை, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரிகளின் முதல்வராகவும் பணியாற்றி உள்ளார். 2018 முதல் 2022 வரை சென்னை மருத்துவக் கல்லூரியில் கல்லீரல் துறை இயக்குநராகவும் இருந்துள்ளார். மேலும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் சென்னை கிண்டியில் உள்ள கிங் மருத்துவமனையில் சிறப்பான சேவை செய்து, தனது பங்களிப்பை வழங்கியதற்காக தமிழக அரசிடம் இருந்து விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.