வெளிநாட்டு முதலீடுகள் பற்றி விஷமத்தனமான கருத்து கூறுவதா? ஆளுநருக்கு வைகோ கண்டனம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி இழிவுபடுத்தியது கண்டனத்திற்கு உரியது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழக துணை…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி இழிவுபடுத்தியது கண்டனத்திற்கு உரியது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் பேசிய அவர் தமிழ்நாட்டுக்கு இணையான முதலீடுகளை ஹரியாணா மாநிலம் ஈர்த்து வருகிறது. நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வராது. முதலீடுகளை ஈர்க்கத் திறமையான மற்றும் பொருத்தமான மனித ஆற்றலை உருவாக்குவதே சிறந்த வழியாக இருக்கும். உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சூழலை உருவாக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர், ஜப்பானுக்கு 9 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு விட்டுத் திரும்பி இருக்கிறார். இந்தப் பயணத்தில் ஐ.பி நிறுவனம், டைசல் நிறுவனம், ஹோம்ரான் ஹெல்த்கேர் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுடன் ரூ.3,233 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் சொல்லி இருக்கிறார்.

முதலமைச்சரின் இந்த வெளிநாட்டுப் பயணத்தை இழிவுபடுத்தி ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலகால விஷத்தைக் கக்கி இருக்கிறார். ஆளுநரின் பேச்சும் செயல்பாடுகளும் எல்லை மீறி போய் கொண்டு இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. தமிழ்நாட்டின் முதல் விரோதியாக விளங்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளியேற்ற வேண்டும். இல்லையேல் நாகலாந்து மாநிலத்தில் மக்கள் விரட்டி அடித்தது போல தமிழ்நாட்டிலும் நடக்கும்.

என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.