ஆளுநர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று காலை 11.45 மணிக்கு சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் வழங்க உள்ளனர்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே அண்மைக்காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை பாராட்டும் நிகழ்வில் உரை நிகழ்த்திய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து கடந்த 9ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடரில் உரை நிகழ்த்திய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு தயாரித்த கொடுத்த உரையில் சில பகுதிகளை தவிர்த்ததுடன் தமிழ்நாடு அரசு என்ற சொல்லையே பயன்படுத்தவில்லை. பின்னர், தேசியகீதம் இசைக்கப்படுவதற்கு முன்னதாகவே சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக எம்.பிக்கள் டி.ஆர். பாலு, ஆ.ராசா, என்.ஆர்.இளங்கோ, வில்சன் உள்ளிட்டோர் அடங்கிய தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் குழு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை டெல்லியில் இன்று காலை 11.45 மணிக்கு சந்திக்கின்றனர். அப்போது, ஆளுநர் விவகாரம் தொடர்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தை குடியரசுத்தலைவரிடம் அவர்கள் வழங்க உள்ளனர்.