”வள்ளலாரின் வரலாறு தெரியாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி அறியாமையை வெளிப்படுத்தி வருகிறார்” – டி.கே.எஸ் இளங்கோவன்!

வள்ளலாரின் வரலாறு தெரியாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி அறியாமையை வெளிப்படுத்தியுள்ளார் என திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெற்ற வள்ளலாரின் 200-வது ஆண்டு ஜெயந்தி விழாவில் பங்கேற்ற ஆளுநர்…

வள்ளலாரின் வரலாறு தெரியாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி அறியாமையை வெளிப்படுத்தியுள்ளார் என திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெற்ற வள்ளலாரின் 200-வது ஆண்டு ஜெயந்தி விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என்று கூறினார். அவரது இந்த கருத்து தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆளுநரின் சமீபத்திய பேச்சு குறித்து திமுகவின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் நியூஸ்7 தமிழுக்கு பேட்டியளித்தார்.

அப்பேட்டியில்  டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்ததாவது:

ஆளுநருக்கு தமிழ்நாட்டில் வள்ளலார் வரலாறும் தெரியாது இங்கு உள்ள நிலைமைகளும் தெரியாது என்பதை நிரூபித்துக் கொண்டு உள்ளார். வள்ளலார் திருவருட்பா எழுதிய போது அதை மருட்பா என்று கேலி செய்தவர்கள் சனாதனவாதிகள். அந்த வரலாறு எல்லாம் அவருக்கு தெரியாது. அதற்கு மிகப்பெரிய கண்டனங்கள் இருந்தன.

சனாதனமும் வள்ளலாரும் ஒன்று என்று சொல்லுகிற ஆளுநரை நாம் எப்படி புரிந்து கொள்வது. அவருக்கு ஒன்றும் தெரியவில்லை அறியாமையை வெளிப்படுத்துகிறார். ஆளுநர் பதவிக்கு அவர் தகுதி இல்லாததையும் சேர்த்து நிரூபித்துக் கொண்டுள்ளார். ஆளுநராக அந்த பதவிக்கு உரிய நபராக செயல்படாமல், ஆர்.எஸ்.எஸ்-இன் தொண்டர் போல செயல்பட்டு வருகிறார். அந்த பதவிக்கு உரிய கௌரவத்தையும் கண்ணியத்தையும் காப்பாற்றாமல் ஆர்.எஸ்.எஸ் தொண்டர் போல செயல்படுகிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.