ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தமிழக ஆளுநர் ரவி சுவாமி தரிசனம்

உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக, தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நேற்று ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் தனியார் தங்கும்…

உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக, தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நேற்று ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் தனியார் தங்கும் விடுதியில் தனது குடும்பத்துடன் அறை எடுத்து தங்கியிருந்தார். அவரை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கிஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இன்று அதிகாலை தனியார் நட்சத்திர விடுதியில் இருந்து புறப்பட்டு காலை 5.50 மணி அளவில் ராமநாத சுவாமி சன்னதியில் தனது குடும்பத்தாருடன் தமிழக ஆளுநர்  சுவாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக, அக்னி தீர்த்த கடற்கரைக்கு சென்ற அவர் புனித நீராடினார். பின்பு கோயில் வாசலில் வைத்து பூரண கும்ப மரியாதை கோவில் நிர்வாகம் சார்பில் ஆளுநருக்கு வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து, விநாயகர் சன்னதி அருகில் கொண்டு வரப்பட்ட 22 புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடினார். பின்னர் ராமநாத சுவாமி ஸ்ரீ பர்வத வர்த்தினி
அம்பாளை தரிசனம் செய்தார்.

மேலும் ஆளுநரின் வருகையையொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் நான்கு ரத வீதிகளிலும் காவல் துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மேலும்  அவர் தமிழகத்தின் கடைக்கோடியான தனுஷ்கோடி, அப்துல் கலாம் இல்லம் மற்றும் அப்துல் கலாம் நினைவிடம் பகுதிக்கு நேரில் குடும்பத்தாருடன் செல்ல உள்ளார்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.