ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை ஆய்வு செய்தார் தமிழக ஆளுநர்.
நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை 1,53,21,089 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து 1,31,08,582 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 20,31,977 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
தொற்று பாதிப்பில் தமிழகம் 4வது இடத்தில் 10,13,378 எண்ணிக்கையுடன் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,986 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்து வருகின்றது.

இந்நிலையில், இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருவள்ளூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியை ஆய்வு செய்தார். இதில், கோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கோவிட் -19 தடுப்பூசிக்கான விழிப்புணர்வு உந்துதல் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் பிற அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இந்த ஆய்வின்போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பி.ஏ. பொன்னையா உடனிருந்தார். தமிழக ஆளுநரும் கோவிட் தடுப்பூசி எடுத்த பொதுமக்களுடன் உரையாடி, தடுப்பூசியின் முக்கியத்துவத்தை அவர்களது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 13,205 பேர் உயிரிழந்துள்ளனர் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







