அம்மா மருந்தகங்களை மூடும் நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அரசால் நிறைவேற்றப் பட்ட பல மக்கள் நல திட்டங்களை, தற்போதைய அரசு தடுத்து வருவதாகவும்,அம்மா உணவகங்களில் திட்டமிட்டு ஆட்குறைப்பு செய்தல், உணவுப்பொருட்களை குறைவாக வாங்குதல், ஊதியம் குறைத்தல் போன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அம்மா சிமென்ட்டின் விற்பனை விலை 190 ரூபாய் முதல் 216 ரூபாய் வரை இருந்த நிலை யில், அதை நிறுத்திவிட்டு, வலிமை சிமென்ட் என பெயர் மாற்றம் செய்து, 350 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அமைக்கப்பட்ட குழுக்கள் என்ன செய்கின்றன எனவும், அரசுக்கு அவை வழங்கிய ஆலோசனைகள் என்ன எனவும் கேள்வி எழுப்பியுள்ள எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நிதி நிலைமையை மேம்படுத்த முடியாமல், அதிமுக அரசால் தொடங்கப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை நிறுத்துவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
பயணிகளின் வசதிக்காக, 10 ரூபாய்க்கு விற்பனை செய்துவந்த அம்மா குடிநீர் திட்டத்தை முழுமையாக நிறுத்திவிட்டதாகவும், அம்மா மினி கிளினிக் மற்றும் அம்மா நடமாடும் மருத்துவமனைகளையும் மூடிவிட்டு, அதே திட்டத்திற்கு இல்லம் தேடி மருத்துவம் என பெயர் மாற்றம் செய்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாட்டு மக்களின் மருத்துவ செலவை பெருமளவு குறைத்த அம்மா மருந்தகங்களை மூட அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதாகவும், மக்களின் உயிர்காக்கும் தரமான மருந்துகளை சலுகை விலையில் விற்பனை செய்யும் அம்மா மருந்தகங்களை மூடக்கூடாது என தமிழ்நாடு அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் நலனுக்கு எதிரான இந்தமுடிவுகளை அரசு உடனே கைவிட்டு, அதிமுக அரசின் திட்டங்களை தடுக்கக் கூடாது எனவும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்








