கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பெண், 202 நாளுக்குப் பிறகு தொற்றை வென்றுள்ளார்.
குஜராத் மாநிலம் தாஹோத் (Dahod)மாவட்டத்தைச் சேர்ந்தவர் கீதா தர்மிக் (45). இவருக்கு கடந்த மே மாதம் 1 ஆம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ரயில்வே தொழிலாளியின் மனைவியான இவர், ரயில்வே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உடல் நிலை மோசமடைந்தது. இதையடுத்து வடதோராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை அளித்தும் அவர் நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் தொடர்ந்து ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆக்சிஜன் இல்லாமல் அவரால் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. பின்னர் அவர் மெதுமெதுவாகக் குணமடைந்து வந்தார்.
இந்நிலையில், 202 நாட்களுக்குப் பிறகு முழுமையாக குணமடைந்தார். மருத்துவமனை யில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன கீதாவை, அவர் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர். இத்தனை நாளுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன அவர், மருத்துவர்கள் மற்றும் செவிலியர் களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.








