சென்னை மாங்காட்டில் 11ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மூன்று இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த மாங்காடு பகுதியைச் சேர்ந்த மாணவி, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்த மாணவி எழுதிய கடிதத்தில், கல்லறையும், தாயின் கருவறையும் தான் பாதுகாப்பானது என உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார். மாணவி தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மாணவியின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அதில் உள்ள தரவுகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். மாணவி எழுதிய கடிதத்தில், முன்னாள் ஆசிரியரின் மகன்தான் காரணம் எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், சந்தேகத்தின் பேரில், 17 வயது சிறுவன் உட்பட 3 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கிடையே, தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி எழுதிய மற்றுமொரு உருக்கமான கடிதம் கிடைத்தது. அதில், ஒருவரால் மட்டும் இந்த உலகத்தை மாற்றிவிட முடியாது எனக் குறிப்பிட்டிருந்தார். தனக்குள் கவலை மிகுந்த கதைகள் அதிகம் இருந்ததாகக் குறிப்பிட்டிருந்த அவர், முதலாம் வகுப்பு படிக்கும்போது ஏற்பட்ட சம்பவம் தனக்கு மிகுந்த வலியையும் வேதனையும் தந்ததாக உருக்கமுடன் தெரிவித்துள்ளார். தாம் அவர்களை அடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள மாணவி, தாம் இறந்துபோன பின்பு, தன்னுடைய ஞாபகங்கள் அவர்களுக்கு இருக்கும் எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.