அரசுப்பள்ளி பெண் ஊழியர் கொலை முயற்சி

அரசுப்பள்ளி பெண் ஊழியரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே, கற்பகநாதர் குலத்தைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவருக்குத்…

அரசுப்பள்ளி பெண் ஊழியரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே, கற்பகநாதர் குலத்தைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். புவனேஸ்வரி, அதேபகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பணி முடிந்து வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த புவனேஸ்வரி மீது இருசக்கர வாகனத்தை மோதிய மதிவாணன் என்ற நபர், அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், மறைத்து வைத்திருந்த கத்தியால் புவனேஸ்வரியை சரமாரியாகக் குத்தியுள்ளார்.

மேலும், தனது கையை அறுத்துக்கொண்டு உயிரிழப்பு க்கும் முயன்றுள்ளார். அவரை மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள், புவனேஸ்வரியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருவாரூர் அரசு மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து விசாரணையில், பள்ளி நாட்கள் முதல் புவனேஸ்வரியுடன் நண்பராகப் பழகி வந்த மதிவாணன், அவரது கணவர் வெளிநாடு சென்றதும் தவறாக நடக்க முயன்றதாகத் தெரிகிறது. இதுகுறித்து, புவனேஸ்வரி தமது உறவினர்களிடம் கூறியதையடுத்து, அவர்கள் மதிவாணனை கண்டித்துள்ளனர். இந்நிலையில்தான், புவனேஸ்வரியை அவர் கொலை செய்ய முயன்றது தெரியவந்ததது. மேலும் மதிவாணனை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.