பக்கத்து வீட்டின் குளியலறை அருகே நின்று கொண்டிருந்தவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
சென்னை தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாக்கம் அண்ணா தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது வீட்டின் அருகே ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். சீனிவாசனின் 20 வயது மகள் குளிக்க செல்லும் போது அடிக்கடி ஏழுமலை குளியலறை அருகில் நிற்பதை வாடிக்கையாக செய்துள்ளார். சீனிவாசனும் ஏழுமலையை பலமுறை எச்சரித்துள்ளார். ஆனாலும் ஏழுமலை தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. அதன் தொடர்ச்சியாகவே ஒரு பரபரப்பு சம்பவம் நடந்து முடிந்துள்ளது.
வழக்கம் போல் சீனிவாசனின் மகள் குளிக்கச் சென்றபோது ஏழுமலை குளியலறை அருகே சென்று நின்றுள்ளார். இதனை அறிந்த சீனிவாசன் ஏழுமலையிடம் தகராறு செய்துள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திமடைந்தவர் ஏழுமலையை கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஏழுமலையின் மனைவியும் குழந்தைகளும் தடுக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்களையும் சீனிவாசன் கத்தியால் குத்தியுள்ளார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலையூர் காவல் நிலைய போலீசார் ஏழுமலை உட்பட காயமடைந்தவர்கள் அனைவரையும் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சீனிவாசன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பக்கத்து வீட்டின் குளியலறை அருகே நின்று கொண்டிருந்தவர் கத்தியால் குத்தப்பட்டதும், தடுக்க முயன்ற அவரது மனைவி, மகளுக்கும் கத்திக் குத்து விழுந்ததும் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.







