ஒசூரில் அரசுப்பள்ளி கட்டடத்தை, மர்மநபர்கள் ஜேசிபி இயந்திரம் கொண்டு தரைமட்டமாக்கிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒசூர் சீதாராம்நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான அரசுப்பள்ளி உள்ளது. துவக்கப்பள்ளியாக இருந்த இந்த அரசுப்பள்ளி பின்னர் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.இடப்பற்றாக்குறை மற்றும் பல்வேறு இடையூருகள் காரணமாக அருகில் புதிய கட்டிடத்திற்கு இந்த அரசுப்பள்ளி மாற்றம் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த அரசுப்பள்ளி கட்டத்தில் பள்ளியின் பொருட்கள் பாதுகாத்து வைக்கப்பட்டு அவ்வப்போது மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்துள்ளது. மேலும், பள்ளியின் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை இந்த கட்டடத்தில் பாதுகாத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், அங்கு வந்த இருவர் ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளி கட்டடத்தை இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர். அங்கிருந்தவர்கள் இதுகுறித்து அவர்களிடம் கேட்டதற்கு பள்ளி இருந்த இடத்தை நாங்கள் வாங்கியுள்ளோம் என கூறியுள்ளனர். இதைக்கேட்ட பொதுமக்கள் அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஒசூர் மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன் உள்ளிட்ட அதிகாரிகள், அரசுப்பள்ளி கட்டடம் இடிக்கப்பட்ட இடத்தினை பார்வையிட்டனர். பின்னர் பள்ளி ஆசிரியர்களும், மாநகராட்சி அதிகாரிகளும் பள்ளி கட்டடத்தை இடித்தவர்கள் மீது போலீசாரிடம் புகார் அளித்தனர்.







