கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வீட்டிலும் மக்கள் முகக்வசம் அணிய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது. நேற்றைய தினத்தில் மட்டும் இந்திய அளவில் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,76,36,307 பேர் ஆக உள்ளது. மேலும் இதுவரை 1,97,894 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலால் டெல்லி திணறிவருகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடு ஒரு பக்கம் என்றால் தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கைகள் இல்லை என்ற சிக்கல் மறுபக்கம் என்று மக்கள் கையறு நிலையில் சிக்கி உள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லி, கர்நாடக மாநிலங்கள் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் நிதி அயோக் சுகாதாரத்துறையின் உறுப்பினர், மருத்துவர் விகே பால் கூறுகையில் ‘ பெருகி வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வீட்டிலும் மாஸ்க் அணிய வேண்டும். காற்றோட்டம் குறைவாக இருக்கும் இடங்களைத் தவிர்க்க வேண்டும். கைகளைச் சோப்பால் நன்கு கழுவ வேண்டும்’ என்று அவர் அறிவுறுத்தி உள்ளார்.







