சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு அரசு வேலை – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

“அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடையும் , அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்க வேண்டும்” என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளதாவது: தமிழக…

“அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடையும் , அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்க வேண்டும்” என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளதாவது: தமிழக அரசிற்குச் சொந்தமான அரியலூரில் உள்ள அரசு சிமெண்ட் ஆலைக்கு 1996 ஆம் ஆண்டு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்துவது வருந்தத்தக்கது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு சிமெண்ட் ஆலைக்கு தேவையான மூலப்பொருள்கள், புதுப்பாளையம் , ரெட்டிபாளையம், பெரியநாகலூர் , வாலாஜாநகரம், கயர்லாபாத், அமீனாபாத் ஆகிய பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் கிடைகிறது.

ஆகவே, அரசின் வேண்டுகோளுக்கு அங்குள்ள 600 விவசாயிகள் அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்தனர். நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் இழப்பீடு அளித்து, அரசு நிலத்தை கையகப்படுத்தியது. அதோடு நிலம் அளித்த விவசாயி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் உறுதியளித்து இருந்தது. நெல், சோளம், கேழ்வரகு, கடலை, எள் போன்ற பணப் பயிர் செய்யும் எங்களுக்கு இந்த இழப்பீடு தொகை போதுமானதாக இல்லை. மேலும் உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், அவற்றிற்கு அரசு செவிசாய்க்காததால் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அவர்களின் வழக்கை விசாரித்த அரியலூர் சார்பு நீதிமன்றம் அவர்களுக்கு கூடுதல் இழப்பீடாக ஒரு ஏக்கருக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அரசு சிமெண்ட் ஆலை வழங்க வேண்டும் என்றும், அதனை வட்டியுடன் சேர்த்து ரூ. 8 லட்சம் அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது. ஆனால், தமிழக அரசு விவசாயிகளுக்கு இழப்பீடை அளிக்காமல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது . இது நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வெந்த புண்ணில் வேல் பாச்சுவது போல் இருக்கிறது. மக்களை காக்க வேண்டிய அரசே அவர்களை எதிர்த்து வழக்கு தொடுப்பது வேதனைக்குரியது.

நிலம் கொடுத்த விவசாயிகள் தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையையும் , உரிய இழப்பீடையும், நீதிமன்ற உத்தரவுப்படி காலதாமதம் இல்லாமல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதை அரசு பரிசீலனை செய்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.