அரசின் கட்டுப்பாடுகள் நீக்கம் – விமான நிறுவனங்களுக்கு கொண்டாட்டம்

விமான பயண கட்டணம் மீதான அரசின் கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதால், செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் விமான பயணக் கட்டணம் உயருமா ? விமான நிறுவனங்களின் லாபம் அதிகரிக்குமா ? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதனால்,…

விமான பயண கட்டணம் மீதான அரசின் கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதால், செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் விமான பயணக் கட்டணம் உயருமா ? விமான நிறுவனங்களின் லாபம் அதிகரிக்குமா ? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதனால், வான்வெளி சந்தையில் ஏற்படப்போகும் மாற்றங்கள் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

 

விமான போக்குவரத்து துறை வேகமாக வளர்ச்சியடைந்தால் விமான பயணிகளுக்கு விரைவான தரமான சேவை கிடைக்கும் என கூறி தனியார் விமான நிறுவனங்களுக்கு பல சலுகைகளை வாரி வழங்கின மத்திய, மாநில அரசுகள். ஆனால் நடைமுறையில் பொதுத்துறை நிறுவனங்களான ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன் போல் சமீப ஆண்டுகளாக பெரும்பாலான தனியார் விமான நிறுவனங்களாலும் லாப பாதையில் பயணிக்க முடியவில்லை.

 

கொரோனா தொற்று காலத்தின் முதல் அலையின் போது, சில மாதங்கள் விமான சேவை நிறுத்தப்பட்டது. பிறகு 2020 மே மாதத்தின் கடைசி நாட்களில் மீண்டும் விமான சேவை ஆரம்பமானது. அப்போது, விமான போக்குவரத்து அமைச்சகத்தால் விமான பயணக் கட்டணங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதன் படி விமான நிறுவனங்கள்
40 நிமிடங்களுக்கு குறைவான, உள்நாட்டு விமான சேவைக்கு பயணக்கட்டணமாக, இரண்டாயிரத்து 900 ரூபாய் முதல் எட்டாயிரத்து 800 ரூபாய் வரை மட்டுமே வசூலிக்க வேண்டும் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இத்துடன் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது.

இந்த கட்டண கட்டுப்பாடால் பயணிகளுக்கும், விமான நிறுவனங்களுக்கும் ஓரளவு பலன் கிடைக்கும் என அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. ஆனாலும் பெரும்பாலான நேரங்களில் விமான பயண கட்டணம் அரசு நிர்ணயித்த உச்ச பட்ச கட்டணத்தையே வசூலித்தன என விமான பயணிகள் கூறி வந்தனர். கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததால், கட்டுப்பாடுகள் ஒவ்வொன்றாக தளர்த்தப்பட்டு வருகிறது. உள்நாட்டு விமான பயண கட்டணங்களுக்கான வரம்புகள், 27 மாதங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 31 முதல் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை விமான நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டுமென விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

 

அதன்படி இனி செப்டம்பர் முதல் தேதியிலிருந்து தனியார் விமான சேவை நிறுவனங்கள் தாங்களாகவே, பயணக்கட்டணத்தை நிர்ணயித்து கொள்ளலாம். இதனால் உள்நாட்டு போக்குவரத்து துறை வளர்ச்சி அடையும் எனவும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். விமான பயண கட்டண கட்டுப்பாடு நீக்க நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த விமான போக்குவரத்து நிபுணர்கள், ஆகஸ்ட் முதல் தேதி நிலவரப்படி, விமானத்தில் பயன்படும் ஏர் டர்பைன் பெட்ரோலின் விலை 1000 லிட்டர், ஒரு லட்சத்து 21 ஆயிரமாக உள்ளது என்றனர்.

கடந்த மாதத்தை விட 15 சதவீதம் குறைவு. அத்துடன் பெரு முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் ஆகாசா ஏர் நிறுவனமும், இந்திய வான் வெளியில் பறக்க ஆரம்பித்துள்ளதால், உள்நாட்டு விமான சேவையில் இனி போட்டிகள் அதிகரிக்கும். எனவே கட்டுப்பாடற்ற நிலையால் விமான நிறுவனங்கள் பயணக்கட்டணம், இயக்க செயல்பாடுகளில் தனியாக முடிவெடுத்து லாப பாதைக்கு திரும்பி, நிதி செயல்பாட்டில் உயரே பறக்க உதவும் என்கின்றனர்.

 

இனி விமான பயணக்கட்டணங்களை, நிறுவனங்களே நிர்ணயித்து கொள்வதால், பயண கட்டணம் அதிக அளவிலே வசூலிக்கப்படுவதுடன், நடுத்தர மக்கள் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்றால், விமான நிறுவனங்கள் மனது வைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் விமானத்தில் பறப்பவர்கள் எண்ணிக்கை 14 கோடியாகவும், உள்நாட்டில் பறப்பவர்கள் எண்ணிக்கை 10 கோடியாக உள்ளது. மேலும் உலக அளவில் மூன்றாவது பெரிய விமான போக்குவரத்து சந்தையாக இந்திய வான்வெளி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

– ரா.தங்கபாண்டியன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.