கோவர்த்தன பூஜை – செல்வம் சேரும் வழிகள்

“தான் செய்த வினையின் காரணமாகவே, எந்த ஒரு ஆன்மாவும், விலங்காக, மனிதனாக,தேவராக பிறவி எடுக்கிறது” என்பது மகாவீரரின் வாக்கு. அப்படி மனிதப்பிறவி எடுத்தவன், தத்தம் கலாச்சாரத்துக்கு ஏற்ப கலந்தும், நிறைந்தும், தம் வாழ்க்கைப் பாதையை…

“தான் செய்த வினையின் காரணமாகவே, எந்த ஒரு ஆன்மாவும், விலங்காக, மனிதனாக,தேவராக பிறவி எடுக்கிறது” என்பது மகாவீரரின் வாக்கு. அப்படி மனிதப்பிறவி எடுத்தவன், தத்தம் கலாச்சாரத்துக்கு ஏற்ப கலந்தும், நிறைந்தும், தம் வாழ்க்கைப் பாதையை வகுத்துக் கொள்கிறான். இந்த வகையில் பண்டிகைகள் , அவனது வாழ்வினை அர்த்தம் உள்ளதாக்கி, இன்பமாக இருப்பதற்கு உதவுகிறது.  தீபாவளி போன்ற பண்டிகைகளில் அவன் இறையுணர்வு பெற்று, ஒழுக்கமாக இருக்க தம்மை பக்குவப் படுத்திக் கொள்கிறான்.

“பக்தி பூர்வமாக இருப்பதற்கு நாம் துறவரத்தில் இருக்க வேண்டும் என்பது இல்லை. இல்லறத்தில் இருந்த படியே, உனக்குரிய எல்லாக் கடமைகளையும் செய், ஆனால் மனம் மட்டும் இறைவனிடம் இருக்கட்டும்” என்பார் ராமகிருஷ்ண பரமஹம்சர். அப்போது எல்லா செல்வங்களும் தேடி வரும்.

“எட்டு வகை லட்சுமியில் ஏராளமான செல்வம் —

கொட்டும் வகை நானறிந்தேன்

கோல மயிலானவளே

வெற்றியுடன் நாங்கள் வாழ

வேண்டும் ஆதி லட்சுமியே

வட்ட மலர் மீதமர்ந்து

வருவாய் இது சமயம்”

என்று மனமுருகப் பாடி  தெய்வீக பண்டிகை நாட்களில், இறைவனையும், அம்பாளையும் வேண்டி அழைப்போம்.

குறிப்பாக தீபாவளி பூஜை மற்றும் அதைத் தொடர்ந்து வரும் லக்ஷ்மி பூஜைகளில் பஞ்ச பூதங்களை வழங்கிய இறைவனுக்கு, நன்றி கூறும் வகையில், ஐந்து விதமான செயல்களைச் செய்வர், அவைகள் “பஞ்சோபசாரம்” என அழைக்கப்படும். அவைகள்

1.பிரித்வி தத்துவம் (நிலம்)

சுவாமி சிலை / படம் வைத்து,சந்தனம், குங்குமம் சாத்தி வழிபாடு.

2.ஆகாய தத்துவம்

பூக்களால் அர்ச்சிப்பது, அழகு படுத்துவது.

3.வாயு தத்துவம்

சாம்பிராணி/ஊதுபத்தி கொண்டு தூபம் போடுவது

4.அக்னி தத்துவம்

தீபம்/கற்பூரம் ஏற்றி வழிபாடு.

5.நீர்தத்துவம்

தண்ணீர், நைவேத்ய உணவு படைத்து வழிபாடு.

இவ்வாறெல்லாம் வழிபாடு செய்து,தீபாவளி போன்ற தினங்களைக் கொண்டாடியவர்கள் சிலரின் கதையைப் பார்ப்போம்.

மராட்டியத்தில்,ஒருசமயம் ஹிமா மன்னர் ஒருவர், தன் மகன் 16 வயதில் பாம்பு கடித்து மரணிப்பான் எனஜோதிட நூல் கூறியதை அடுத்து, அந்த நாள் வந்தபோது,தன் கணவரை காப்பாற்றியே தீருவேன் என உறுதி பூண்ட இளவரசனின் புது மனைவி, பாம்பு வீட்டுக்குள் நுழைந்து விடாத படி, வீடு முழுவதும் தீபங்கள் ஏற்றி,எல்லா இடங்களிலும் தங்க,வைர, வைடூரிய, நகைகளையும், பொற்காசுகளையும் கொட்டி வைத்தாள். அவைகளில் தீபத்தின் ஒளிபட்டு அரண்மனையே பிரகாசமாகி விட்டது.

குறிப்பிட்ட நேரத்தில் எமன் பாம்பு ரூபத்தில் வர,அந்த ஒளி வெள்ளத்தில் , செயலிழந்து நகைகளின் மேல் அமர்ந்தவாறு,இளவரசி பாடும் பக்திப் பாட்டுகள், சுலோகங்கள், மந்திரங்கள் கேட்டவாறு இருக்க, பொழுது விடிந்து விட்டது. கெடு முடிந்ததால் பாம்பு  திரும்பியது. இளவரசியின் தந்திரத்தால் உயிர் காப்பாற்றப் பட்டது. இந்த நாளை, அங்கு”தந்திராஸ்” எனும் பெயரில், தீபாவளிக்கு இரண்டு நாள் முன்பு கொண்டாடுவர். இப்பூஜை ஆண்களின் உயிரைக் காக்கும் என நம்புவர்..

மற்றொரு கதை:

தேவர்களின் தாயார் பெயர் அதிதீ. ஒருசமயம்,நரகாசூரனால்,இங்கிருந்த 16000 பெண்கள் சிறைபிடிக்கப்படடனர். இது தவிர அதிதீயின் மந்திரங்கள் நிறைந்த,சக்தி கொண்ட,கம்மலையும் எடுத்துப் போனான். தேவர்கள்,செய்வதறியாமல்,விஷ்ணுவை தஞ்சமடைந்து வாக்கு பெற்றனர். அதன் பிரகாரம் விஷ்ணு நரகாசுரனைக் கொன்று,பெண்களைக் காப்பாற்றியதோடு,கம்மலையும் மீட்டுத் தந்தார். உலக மக்களின் பயத்தைப் போக்கியதால் ,தீபாவளிக்கு முந்தய அந்த நாளை ” நரக சதுர்த்தி” தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.

வட மாநிலங்களில் பெண்கள், ஆறுகளில்,தீபங்களை மிதக்கவிட்டு, தீபாவளியை கொண்டாடுவர். “கங்கா ஆர்த்தி”எனும் தினசரி நிகழ்வு, ஹரித்துவார் போன்ற பல இடங்களில் பிரசித்தி பெற்றது.

கர்னாடக மாநிலத் தலைநகரிலிருந்து,430 கி.மீ.தூரத்தில் உள்ள சுமார் 200-300 குடும்பமே வசிக்கும், நுக்சேரி கிராமத்தில், தீபாவளியை பல வருடங்களாக,வெடி வெடிக்காமல், நாம் மாட்டுப் பொங்கல் கொண்டாடுவதைப் போல மாடுகளை அழகுபடுத்தி பூஜை செய்து நடத்துவர்‌.

ஸ்ரீராமர் பாலம் கட்டிய போது, அநுமன், கோவர்தன மலையை  தூக்கிவந்தார். ஆனால்,அதற்குள்,பாலம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. மலையை அங்கேயே ஒரு ஓரத்தில் வைத்து விட்டார்.,கிருஷ்ண அவதாரத்தில் இந்திரனுக்கான ஒரு வழக்கமான பூஜையை அவன் கர்வம் காரணமாக தடுத்து, ஆயர்கள் வாழ்வில் முக்கிய இடம் பிடித்திருக்கும், கோவர்தன மலைக்கு பூஜை செய்ய ஏற்பாடு செய்தார் கிருஷ்ணன். அதைத் தடுக்க,இந்திரன், வருணதேவனை அழைத்து, மழை பொழிந்து, பிருந்தாவனத்தை அழிக்கக் கட்டளை யிட்டான். மஹாவிஷ்ணு அவதாரம் என்பதை மறந்தான்‌. கிருஷ்ணரோ,மலையைத் தன் சுண்டு விரலால் தூக்கி,மக்களை மழையிலிருந்து காத்தார். அவதார மகிமையை உணர்ந்து இந்திரன், கர்வம் ஒழித்து, வணங்கி நின்றான்.‌ இந்த நாளை,”கோவர்தன பூஜை” என்று தீபாவளியைத் தொடர்ந்து அடுத்த நாளில் வீட்டிலேயே மலை போன்ற வடிவம் வைத்து வழிபடுகிறார்கள்.

இவ்வாறு பண்டிகைகள் என்பது மகிழ்ச்சிக்கான நாட்கள் மட்டுமல்ல. வாழ்க்கையைக் தூய்மைப் படுத்தும் ஒரு நிகழ்வு என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

  • சுப்பிரமணியன் 
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.