மதுரையில் நாடார் மஹாஜன சங்க தேர்தல் நடைபெற்ற நிலையில், நாடார் மஹாஜன சங்கத்தின் பொதுச்செயலாளராக கரிக்கோல்ராஜ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நாடார் மஹாஜன சங்க தேர்தல் கடந்த 6ம் தேதி மதுரை நாகமலை புதுக்கோட்டையிலுள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில், நாடார் மஹாஜன சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகளுக்கு தலைவர், செயலாளர், பொருளாளர், துணை தலைவர், மற்றும் நிர்வாகிகள் என மொத்தம் 144 பதவிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது.
ஒய்வு பெற்ற நீதிபதி என்.கிருபாகரன் தலைமையிலான குழுவினர் முன்னிலையில் இந்த தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடந்த மூன்று நாட்களாக இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்றது. மொத்தம் 15,816 வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. நாடார் மஹாஜன சங்க தலைவராக V.S.P.குருசாமியும், பொதுச் செயலாளராக கரிக்கோல்ராஜும், பொருளாளராக A.C.C.பாண்டியனும் அதிக வாக்குகள் பெற்று தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 144 பதவிகளுக்கும் புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான வெற்றி சான்றிதழை ஓய்வுபெற்ற நீதிபதி என்.கிருபாகரன் நேரில் வழங்கினார்.







