இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச தாய்லாந்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு நாடு திரும்பினார்.
கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் ராஜபக்ச சகோதரர்களின் அரசுக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து, கோத்தபய ராஜபக்ச தனது அதிபர் பதவியைத் துறந்து, கடந்த ஜூலை 13ஆம் தேதி நாட்டைவிட்டு வெளியேறினார். அதைத்தொடர்ந்து, மாலத்தீவில் தஞ்சம் அடைந்த அவர் அதன் பிறகு சிங்கப்பூர் சென்றார். அங்கிருந்து வெளியேறிய அவர் தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார்.
ரணில் விக்ரமசிங்கே இலங்கை அதிபராக பதவியேற்ற நிலையில், மீண்டும் நாடு திரும்ப கோத்தபய ராஜபக்ச முடிவு செய்திருந்தார். அதன்படி நேற்றிரவு அவர் தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக இலங்கைக்கு வந்து இறங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பண்டார நாயக்கே சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து இறங்கி கோத்தபய, அங்கிருந்து எங்கு சென்றார் என்பது குறித்து தகவல்கள் இல்லை.
இந்நிலையில், கோத்தபய இலங்கை வந்துள்ளதால் மீண்டும் அவருக்கு எதிராக பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கொழும்புவின் முக்கியப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-ம.பவித்ரா








