அரிசி கடத்தலில் ஈடுபடுவோரும், அதற்கு துணையாக உள்ள அரிசி ஆலை உரிமையாளர்களும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
நாகை மாவட்டம் கீழையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் ஈசனூர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கான கடன் மற்றும் உரங்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்களும், அதற்கு துணையாக உள்ள அரிசி ஆலை உரிமையாளர்களும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்தார்.
இதுவரை அரிசி கடத்தலில் ஈடுபட்ட 11,216 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதில் 113 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார். டெல்டா மாவட்டங்களில் 575 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்கு தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.