அட்சய திருதியை முன்னிட்டு ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்தது.
இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 அதிகரித்த நிலையில், மறுநாள் செவ்வாய்க்கிழமையும் சவரனுக்கு ரூ. 240 அதிரடியாக அதிகரித்தது. எனினும், புதன்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்தது. இதேபோல், நேற்று வியாழக்கிழமையும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ஒரு சவரன் ரூ. 52,960-க்கும், கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் ரூ. 6,620-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 2 முறை அதிகரித்துள்ளது. அட்சய திருதி நாளான இன்று காலையில் ஏற்கனவே தங்கம் விலை சவரனுக்கு ரூ. 360 அதிகரித்த நிலையில், சில மணி நேரத்தில் மீண்டும் சவரனுக்கு ரூ. 360 அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 720 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 53,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 90 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 6,705-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 7,315-க்கும், ரூ. 58,520-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் சூழலில், இன்று அதிரடியாக அதிகரித்து இருப்பது பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.







