சூடானில் தங்க சுரங்கம் இடிந்து விபத்து – 11 பேர் உயிரிழப்பு!

சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்து விபத்திற்குள்ளானதில் 11 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு ஆப்ரிக்காவில் உள்ள சூடானின், கிழக்கு நைல் நதி மாகாணத்தில் கெர்ஷ் அல்பீல் தங்கச் சுரங்கம் அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனிடையே நேற்று முன்தினம் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது.

இதில், ஏராளமான தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர்.

இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் சூடானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அங்கு தரமற்ற பாதுகாப்பு நடைமுறைகளால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதேபோன்ற சம்பவங்களில் 2023ம் ஆண்டு 14 சுரங்கத் தொழிலாளர்களும், 2021ம் ஆண்டு 38 சுரங்க தொழிலாளர்களும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.