ஐந்து பவன் தங்க நகைக்கு கீழ் கூட்டுறவு சங்கங்களில் அடகு வைக்கப்பட்டுள்ள நகை கடன் தள்ளுபடி செய்யும் அறிவிப்பாணை ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” 5 பவன் தங்க நகைக்கு கீழ் கூட்டுறவு சங்கங்களில் அடகு வைக்கப்பட்டுள்ள நகை கடன் தள்ளுபடி என்ற அறிவிப்புக்கான அரசாணை இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும். இதன் மூலமாக 11 லட்சம் பயனாளர்கள் பலனடைவார்கள். ஏற்கெனவே தமிழ்நாட்டில் 303 கூட்டுறவு மருந்தகங்கள் இருக்கும் நிலையில், புதிதாக 300 கூட்டுறவுத்துறை மருந்தகங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் படிப்படியாக திறக்கப்படும்’என்று தெரிவித்த அவர் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டியை குறைப்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் 12,100 கோடி விவசாயக்கடன் தள்ளுபடி, 5000 கோடி நகைக்கடன் தள்ளுபடி, 2500 கோடி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி என ஒரே ஆண்டில் ஏறத்தாழ 20,000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை இப்படி ஒரே ஆண்டில் தள்ளுபடி கூட்டுறவு சங்க வரலாற்றில் நடந்தது இல்லை எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் ‘ இதனால் ஏற்படும் நிதிச்சுமையால் பொதுமக்களுக்கான சேவைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.
கூட்டுறவு கடன் சங்கங்கள் அனைத்தும் 6 மாதங்களுக்குள் கணினி மயமாக்கப்படும். கூட்டுறவு பண்டகசாலை மூலமாக விற்பனை செய்யப்படும் பொருட்கள், வெளிச்சந்தையை விட குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். நியாயவிலைக் கடைகளில் உள்ள விற்பனையாளர், உதவியாளர் பணியிடங்களுக்கான 4,000 காலியிடங்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் பணியிடங்கள் நிரப்பப்படும்.
கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட நகைக்கடனில் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது தேவைப்பட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான ஆடிட்டிங் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் இந்த பணி நிறைவு செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று அவர் கூறினார்.