போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கானுக்கு கஞ்சா ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் புகாரை, நடிகை அனன்யா பாண்டே மறுத்துள்ளார்.
பாலிவுட்டில் கடந்த சில மாதங்களாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரிழப்பை அடுத்து இந்த விசாரணை தீவிரமானது. போதைப் பொருள் வழக்கில் நடிகை சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்கரவர்த்தி உட்பட சிலர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். பின்னர் நடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங், சாரா அலிகான், ஸ்ரத்தா கபூர் ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர். கர்நாடகாவில் நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகிணி திவிவேதி உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில்,சில நாட்களுக்கு முன் பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இந்தி நடிகை அனன்யா பாண்டேவுக்கும் போதைத் தடுப்பு பிரிவினர் சம்மன் அனுப்பி இருந்தனர். அனன்யா, தனது தந்தையும் நடிகருமான சங்கி பாண்டேயுடன் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு நேற்று சென்றார். அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அவருடைய லேப்டாப், மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்த அவர்கள், விசாரணைக்கு இன்றும் வருமாறு கூறியிருந்தனர். அதன்படி இன்றும் விசாரணைக்கு ஆஜரானார்.
ஆர்யன் கானும் அனன்யாவும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். இரண்டு குடும்பங்களும் நெருக்கமானது. கஞ்சாவை ஏற்பாடு செய்வது பற்றி ஆர்யன், நடிகை அனன்யாவிடம் வாட்ஸ் அப்பில் விசாரித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே அனன்யாவிடம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால், இதை அனன்யா மறுத்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
https://twitter.com/ANI/status/1451472308422340610
நடிகை அனன்யா பாண்டே, இப்போது விஜய தேவரகொண்டா ஜோடியாக ’லைகர்’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. புரி ஜெகந்நாத் இயக்குகிறார்.









