புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைந்துள்ள கிளாம்பாக்கத்தில் பயணிகளின் வசதிக்காக புதிய ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் நான்கு பெரும் நகரங்களில் சென்னையும் ஒன்று . சென்னை தமிழகத்தின் தலைநகரமாக, தொழில் துறையில் வளர்ந்துவரும் நகரமாக, அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகத் திகழ்கிறது. அதோடு சாலை போக்குவரத்து, விமான போக்குவரத்து என்று மிகவும் நெருக்கடியான நகரமாகவும் இருக்கிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசலைப் போக்குவதற்காக மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சியில் இன்று சென்னை மெட்ரோ ரயில் திட்டம், விமான விரிவாக்க திட்டம், சென்னையின் புதிய புறநகர் பேருந்து நிலையம் என்று திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சென்னை புறநகரில் ரூ. 393.74 கோடியில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 44.75 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இவற்றில் அரசு புறநகர் பேருந்துகளும், தனியார் ஆம்னி பேருந்துகளும், சென்னை மாநகரப் பேருந்துகளும் அனைத்தும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் அனைத்து வசதிகளுடன் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. தாம்பரத்தில் இருந்து வரும் பேருந்துகள் இந்த புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் வகையில் வசதிகள் உள்ளன. ஆனால், செங்கல்பட்டில் இருந்து வரும் பேருந்துகள் ஜி.எஸ்.டி. சாலையை கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. இதனால், மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்புள்ளது. எனவே, இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு ரயிலில் இருந்து பேருந்து நிலையத்திற்கு வருவதற்கும், அங்கிருந்து ரயில் நிலையத்திற்குச் செல்வதற்கு தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு ரயில் நிலையத்தைதான் பயன்படுத்த முடியும். இதனால் பயணிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும்.
எனவே, புதிய பேருந்து நிலையம் அமைந்திருக்கும் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைத்தால் எல்லோருக்கும் பயனுள்ளதாகவும், வசதியாகவும் இருக்கும். இல்லையென்றால், மாற்றாக அருகில் உள்ள வண்டலூர் அல்லது ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தை அனைத்து ரயில்களும் நின்று செல்லும் வகையில் விரிவாக்கம் செய்ய வேண்டும். சென்னை பெருநகரின் போக்குவரத்து நெரிசலைப் போக்குவதற்கு கிளாம்பாக்கத்தில் புதிய மேம்பாலமும், பயணிகளின் போக்குவரத்து வசதிக்காக புதிய ரயில் நிலையமும் அமைக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக ஆய்வுகள் செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








