ஆரம்பகாலத்தில் அறிவாலயம் கட்டுவதற்கு பணம் கொடுத்ததற்கு எம்.ஜி.ஆர். தன்னை தொடர்பு கொண்டு பாராட்டினார் என இயக்குநர் பாக்கியராஜ் நினைவு கூர்ந்தார்.
போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறும்படம் ‘ஒழுக்கம்’ வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் செஞ்சி கே.மஸ்தான் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு, இயக்குநர்கள் கே.பாக்யராஜ், எஸ்.பி.முத்துராமன், தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் ராதாகிருஷ்ணன், தயாரிப்பாளர் முகமது ரபி, கலைஞானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியில் பேசிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, ஒழுக்கம் என்று சொன்ன போது எந்த ஒழுக்கத்தை சொல்ல போகிறார்கள் என்று நினைத்தேன். படத்தை பார்க்கும் போது அனைத்து கதாபாத்திரங்களும் நன்றாக இருந்தது. எனக்கு கண்ணீரே வந்து விட்டது. படத்தில் நடித்தவர்களும், படத்தை எடுத்தவர்களும் நன்றாக உருவாக்கி உள்ளனர் என்றார். இது போன்று யாரும் போதை பொருளால் சீரழிந்து விடுவார்களோ என்ற பயமும் இருக்கிறது. இது குறித்த விழிப்புணர்வை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் தெரியப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
பின்னர் பேசிய அமைச்சர் செஞ்சி கே.மஸ்தான், இந்த படத்தில் நடித்த அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். ஒழுக்கமான சமுதாயத்தை எடுத்து செல்ல, நாடு முன்னேற்றம் அடைய ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த படம் எடுக்கப்பட்டது. ஒரு படத்தின் மூலம் நல்ல பதிவுகளை கொண்டு நாட்டை காப்பாற்ற அனைவரும் கடமை பட்டிருக்கிறோம். அனைத்து மாணவர்களுக்கும் இந்த செய்தியை எடுத்து செல்ல என்னால் முடிந்த முயற்சியை மேற்கொள்வேன் என்றார்.
இதையடுத்து, பேசிய இயக்குநர் கே.பாக்யராஜ், தான் எம்ஜிஆர் ரசிகன் என்பதால் கருணாநிதிக்கு எதிரியாக தான் என்னை பலரும் பார்த்தார்கள் என கூறினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் அறிவாலயம் கட்ட நன்கொடை கேட்கும் போது, என் வீடருகே வந்தார். ஆனால் அவரது கட்சிக்காரர்கள், வேண்டாம் இது எம்ஜிஆர் கட்சிக்காரர் பாக்யராஜ் வீடு என்று சொன்ன போது, இந்த வீதி முழுவதும் கேட்கும் போது அவரை மட்டும் விட்டு செல்வது சரியல்ல என்று கூறினார்.
பின்னர் என்னிடம் பணம் கேட்ட போது தன்னால் முடிந்த சிறிய தொகையை கொடுத்தேன்.இந்த செய்தியறிந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்த போது எம்ஜிஆர் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டினார். வீடு தேடி வந்து கேட்கும் போது கொடுக்க வேண்டும் என்று கூறினார் என நினைவு கூர்ந்தார். நம்மை நாமே பாராட்டுவதே ஒழுக்கம். நம் மனசாட்சிக்கு சரியாக இருப்பதே முக்கியம்
என்றும் பாக்கியராஜ் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்