எனது மகன் விட்டுச்சென்ற பணியை தொடரவும், முதல்வர் மற்றும் ராகுல்காந்தி ஆகியோரை ஊக்குவிக்கவும் கைசின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என மக்களை கேட்டுக்கொள்வதாக ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி உயிரிழந்ததை அடுத்து, அந்த தொகுதிக்கு பிப்.27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக களம் இறங்கியுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது எனது மகன் விட்டுச்சென்ற பணியை தொடரவும், முதல்வர் மற்றும் ராகுல்காந்தி ஆகியோரை ஊக்குவிக்கவும் கைசின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என மக்களை கேட்டுக்கொண்டார் .
இதனை தொடர்ந்து பாஜக அண்ணாமலை ட்வீட் குறித்து பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், திருவண்ணாமலைக்கும் போக விரும்பவில்லை, அண்ணாமலைக்கும் பதில் சொல்ல விரும்பவில்லை என பதிலளித்தார்.
மேலும் திருமகன் ஈவெரா, நாம் தமிழர் கட்சியில் சேர விரும்பி தன்னை அணுகியதாக சீமான் நேற்று பொதுகூட்டத்தில் பேசியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், சீமான் அடிக்கடி உணர்ச்சி வசப்படுபவர், ஒவ்வொரு நாளும், ஒரு கருத்துக்களை சொல்பவர். மாற்றி மாற்றி பேசும் போக்கினை சீமான் மாற்றி கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இதனையடுத்து ஒன்றிய அமைச்சராக இருந்து விட்டு எம்எல்ஏ தேர்தலில் போட்டியிடுவது தகுதி குறைவாக தெரியவில்லையாக என கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம், கலக்டராக இருந்தாலும் பியூனாக இருந்தாலும் மக்கள் சேவை செய்ய வேண்டும் என்பது தான் விருப்பம். அதை போலவே ஒன்றிய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினராக ஏற்கனவே இருந்த போதிலும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தரக்குறைவாக கருதவில்லை. மக்கள் பணி செய்ய வேண்டும் என்பது தான் என் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.
- பி. ஜேம்ஸ் லிசா










