தனது சேவை காலம் 2022ல் முடிவடையும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்திலிருந்து (ஐஎம்எஃப்) ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு திரும்புகிறார் ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத்.
மைசூரை பூர்விகமாக கொண்ட கீதா, டெல்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவராவார். டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸில் முதுகலை பட்டம் பெற்ற இவர், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இன்னொரு முதுகலை படிப்பை முடித்தபிறகு 2001-ல் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் ஆய்வுப்படிப்பை முடித்தார்.
சிகாகோ பல்கலைக்கழகத்தில் 2001-ல் உதவி பேராசிரியராக பணியாற்றியபிறகு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். இதனையடுத்து கடந்த 2018ல் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக நியமிக்கப்பட்டார். கடந்த 2020ல் மேலும் ஓராண்டு இந்த பொறுப்பில் கீதா தொடர்வதற்கு அனுமதியளிக்கப்பட்ட நிலையில் மூன்றாண்டு பணிக்கு பின்னர் தற்போது மீண்டும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு 2022 ஜனவரியில் திரும்புகிறார். இதனை ஐஎம்எஃப்-இன் செய்திதொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
சர்வதேச அளவில் உள்நாட்டு உற்பத்திகளை கவனித்து காலாண்டு உலக பொருளாதார அறிக்கையை தயாரிக்கும் குழுவுக்கு இவர் தலைமையாக செயல்பட்டு வந்திருந்தார்.
இந்த பணியில் கீதா கோபிநாத் வரலாறு படைத்துள்ளார் என ஐஎம்எஃப் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், “ஐஎம்எஃப்-இல் கீதாவின் பங்கு குறிப்பிடத்தக்கதாகவும், மிகவும் எளிமையாகவும் இருந்ததாகவும் ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.
https://twitter.com/IMFSpokesperson/status/1450597773175312390
பெரும் பொருளாதார மந்தநிலைக்குப் பிறகு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை நாங்கள் கடந்து செல்கின்ற சூழலில், பெரும் பொருளாதாரம் மற்றும் சர்வதேச பொருளாதாரம் குறித்த கீதாவின் துல்லியமான பொருளதார அறிவு ஐஎம்எஃப்-க்கு பெரும் பங்களித்துள்ளது என்றும் ஜார்ஜீவா மெய்சிலிர்த்துள்ளார்.
ஐஎம்எஃப்-இல் தலைமை பொருளாதார நிபுணர் பொறுப்பில் சேவையாற்றும் இரண்டாவது இந்தியரும் முதல் இந்திய வம்சாவளி பெண்ணும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.









