ஆக்ராவில் இளம் பெண் ஒருவர் தன் காதலன் மீது ஆசிட் ஊற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ராவை சேர்ந்தவர் 25 வயதான சோனம் பாண்டே மற்றும் 28 வயதான தேவேந்திரா குமார். சோனம் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணி புரிந்து வருகிறார். மேலும், தேவேந்திரா குமார் அருகில் உள்ள நோயியல் ஆய்வகத்தில் உதவியாளராக பணி செய்கிறார். இருவரும் நீண்ட காலமாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில், தனக்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் முடிவு செய்துள்ளதாக காதலியிடம் தேவேந்திரா குமார் கூறியுள்ளார். ஆனால், தான் இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும் அவருக்கு ஆறுதல் அளித்துள்ளார். அவர் கூறியதை நம்பிய சோனம், உண்மை தெரியவந்ததும் கோபமடைந்தார்.
இதனால், தேவேந்திராவை போலிக்காரணத்தை சொல்லி தன் வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார். பின்னர், தேவேந்திர வீட்டிற்குள் நுழைந்ததும், அவர் முகத்தில் ஆசிட்யை வீசி தாக்கியுள்ளார். வலி தாங்க முடியாமல் தேவேந்திரா குமார் கதறியுள்ளார். இவருடைய கதறலை கேட்டு வீட்டு உரிமையாளர் மேலே சென்று பார்த்துள்ளார். அங்கு வலியால் துடித்து கொண்டிருந்த தேவேந்தராவை பார்த்து விரைந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் இச்சம்பவத்துக்கு காரணமான சோனம் பாண்டே மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.







