நம்மில் பலருக்கும் உலகம் முழுவதும் பயணம் செய்ய வேண்டும்; வெவ்வேறு கலாச்சாரங்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஆனால், அதிதி திரிபாதி என்ற சிறுமிக்கு அந்த கனவு 10 வயதிற்கு முன்பே நனவாகியுள்ளது.
தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அதிதி என்னும் சிறுமி, ஐரோப்பாவின் பெரும்பாலான இடங்களுக்கும், இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும் சென்றுள்ளார். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அதிதி தன் பள்ளிநாட்களில் விடுமுறை ஏதும் எடுக்காமல் இதனை பெற்றோருடன் சேர்ந்து செய்துள்ளார்.
அதிதியின் பெற்றோரான தீபக் மற்றும் அபிலாஷா ஆகியோர் கணக்காளர்களாக பணி புரிந்து வருகின்றனர்.
அதிதியின் பெற்றோர் தங்களது குழந்தையின் கல்விக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் இந்த பயணத்தை திட்டமிட்டு மேற்கொண்டுள்ளனர். இதனால், பள்ளி விடுமுறை மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் மட்டுமே பயணம் செய்வதை உறுதி செய்து கொள்கின்றனர்.
மிக கவனமாக திட்டமிட்டதன் மூலம், அதிதிக்கு 10 வயதாகும் முன்பே 50 நாடுகளுக்கு மேல் அழைத்துச் சென்றுள்ளனர். இதுவரை இவர்கள் ஒரு வருடத்திற்கு சராசரியாக இந்திய மதிப்பில் ரூ.21லட்சம் பணத்தை பயணத்திற்காக செலவிடுகின்றனர்.
இதனை எப்படி சாத்தியமாக்க முடிந்தது என அதிதியின் பெற்றோரிடம் கேட்டபோது, வெளியில் சென்று சாப்பிடுவதனை தவிர்த்தும், கார் உபயோகத்தை குறைத்தும், வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதன் மூலம் பணத்தினை மிச்சப்படுத்தியும் இதனை மேற்கொள்ளமுடிகிறது என்று கூறினர்.
அதிதியின் சுற்றுபயணம் குறித்து அவரது தந்தை கூறியதாவது:
“நேபாளம், இந்தியா, தாய்லாந்து போன்ற பல்வேறு கலாச்சாரங்களைக் கண்டு அதிதி ஆர்வமும் உற்சாகமும் அடைகிறாள். அவளது மூன்று வயதில் பயணம் செய்யத் தொடங்கினோம், வாரத்திற்கு இரண்டரை நாட்கள் பள்ளிக்குச் செல்வாள். வெள்ளிக்கிழமை பள்ளியிலிருந்து நேராக அவளை அழைத்து கொண்டு விமான நிலையம் சென்று பயணத்தை முடித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு விமானத்தில் புறப்பட்டு இங்கிலாந்துக்கு திரும்புவோம்.
அதிதி தன் பயணம் குறித்து மனம் திறந்து பேசியபோது:
“எனக்கு குறிப்பிட்டு சொல்லும்படியாக பிடித்த நாடு அல்லது இடம் என்பது இல்லை, ஆனால் நான் மூன்றைத் தேர்வு செய்ய வேண்டுமானால் அது நேபாளம், ஜார்ஜியா, ஆர்மீனியாவாக இருக்கும். அவற்றில் நான் குதிரை சவாரி செய்தது, மிக நீளமான கேபிள் காரில் சென்றது, எவரெஸ்ட் சிகரம் போன்ற மலைகளைப் பார்த்தது இது மூலம் நேபாளம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாக உள்ளது.
நான் பயணம் செய்வதை மிகவும் விரும்புகிறேன் மற்றும் எனக்கு நிறைய வேடிக்கையான நினைவுகள் உருவாகிறது. நான் மற்ற குழந்தைகளுக்கு இதைப் பரிந்துரைக்கிறேன், ஏனெனில் இது அவர்களின் சமூகத்திறன்களுக்கு உண்மையில் உதவக்கூடும், ”என்று அவர் கூறினார்.
ஜூன் 25 அன்று, 50 நாடுகளுக்கு தனது பயணத்தை முடித்ததன் மூலம் அதிதி ஒரு பெரிய மைல்கல்லை எட்டியதைப் பற்றிய ஒரு பகிர்வை பேஸ்புக்கில் அவரது தந்தை தீபக் பகிர்ந்துள்ளார்.
அதில், “எங்கள் மகளுக்கு 10 வயதாகும் முன்பே 50 நாடுகளுக்குச் செல்ல இலக்கு நிர்ணயித்திருந்தோம், அவளுடைய 10வது பிறந்தநாளுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த மைல்கல்லை எட்டியதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். தனிப்பட்ட சூழ்நிலைகள் காரணமாக, இந்த சந்தர்ப்பத்தில் என் மனைவி எங்களுடன் பயணிக்க முடியவில்லை, அதனால் நானும் எனது மகளும் ருமேனியா, மால்டோவா மற்றும் சான் மரினோ ஆகிய நாடுகளுக்கு மொத்தம் 9 நாட்கள் பயணம் செய்தோம், ”என்று அவர் எழுதியிருந்தார்.
ஃபேஸ்புக்கில் பகிர்ந்த பகிர்வை பார்த்து எங்களுக்கு ஏராளமானோர் குறுஞ்செய்தி அனுப்பினர். அதில், நெட்டிசன்கள் தங்கள் உற்சாகத்தை அடக்க முடியாமல், அதிதியின் பயணம் தங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்பதைப் பகிர்ந்து கொண்டனர். பேஸ்புக் கமெண்ட் பிரிவில் “அற்புதம்” “நல்ல சாதனை” “இது மிகவும் அருமை” என்று பகிர்ந்தும், சிலர் ஹார்ட் எமோஜியையும் பதிவிட்டும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.








