கடல் கடந்த காதல்… மாற்றுத்திறனாளியை கரம்பிடித்த பிலிப்பைன்ஸ் மணமகள்!!!

கடல் கடந்து வந்த பெண்ணிற்கு மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நடத்தி வைத்து அழகு பார்த்த சம்பவம் நெகிழ்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயிலை சேர்ந்த மாற்று திறனாளி கலையரசன் கடந்த 2020…

கடல் கடந்து வந்த பெண்ணிற்கு மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நடத்தி வைத்து அழகு பார்த்த சம்பவம் நெகிழ்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயிலை சேர்ந்த மாற்று திறனாளி கலையரசன் கடந்த 2020 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிய சென்று
இருந்தார். அப்பொழுது இவர் தங்கி இருந்த இடத்திற்கு அருகிலே ஈவ்லின் கோபல் என்ற
பிலிப்பைன்ஸ் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் கலையரசன் வேலை மாற்றம் காரணமாக 2021ல் சென்னைக்கு திரும்பினார். இந்த நிலையில் மீண்டும் இருவரும் முகநூல் வாட்ஸ்அப் சமூக வலைதளம் மூலமாக இவர்களின் காதல் தொடர்ந்து வந்தது.

இதனை அடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் பிலிப்பைன்ஸிலிருந்து ஈவ்லின் கோபலை
அழைத்து வந்து தமிழ்நாட்டு கலாச்சாரப்படி சட்டரீதியாக பத்திர பதிவு அலுவலகத்தில் திருமண பதிவு செய்தார். இதனை அடுத்து தமிழ் முறைப்படி கைலாய வாத்தியம் முழங்க சென்னை அடுத்த ஆவடி திருமுல்லைவாயில் தனியார் திருமண மண்டபத்தில் பெண் ஈவ்லின் கோபலை தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். கடல் கடந்த காதல் இருவரையும் இணைத்தது மகிழ்ச்சியில் ஆரவாரத்துடன் தேவாரம் திருப்புகழ் பாடி அடியார்கள் வாழ்த்தினர்.

தமிழ் முறைப்படி திருமணம் என்றால் பெண் வீட்டார் மற்றும் மாப்பிள்ளை வீட்டார்
இரு குடும்பத்தினரும் ஒன்றாக சேர்ந்து உறவினர்களுடன் திருமணத்தை நடத்தி
மகிழ்வார்கள். இந்த திருமணத்திற்கு திருமண பெண் ஈவ்லின் பெற்றோர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து இந்திய தேசம் வருவதற்கு விசா கிடைக்கவில்லை என்பதால் பெண்ணுக்கு மட்டும் விசா கொடுத்து விடுங்கள் என முயற்சி செய்து அனுப்பி வைத்திருக்கிறார்கள் என கூறப்படுகிறது.

நடைபெற்ற இந்த திருமணத்தில் மாப்பிள்ளை சொந்தங்களுடன் கலந்து கொண்ட நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து வந்த பெண்ணுக்கு இங்கு யாரும் இல்லை என்றாலும், மாப்பிள்ளை உடைய பெற்றோர்கள் உறவினர்கள் பிரிந்து
தாங்கள் பெண் சொந்தம் எனக் கூறி கடல் கடந்து வந்த பெண்ணிற்கு
திருமணத்தை நடத்தி வைத்து அழகு பார்த்த சம்பவம் நெகிழ்ச்சி ஏற்படுத்தி
இருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.